டிஐஜி விஜயகுமார் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன் என தமிழ்நாடு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை குறித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர் கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயக்குமார் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியைத் துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய விஜயகுமார் அவர்களின் பணி போற்றத்தக்கது.
அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயகுமார் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன.
இதுபல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது, ஆகவே விஜயகுமார் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.