அதிமுக கோட்டையை உடைத்து தேனி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிகப்படியான இடங்களில் முன்னிலை பெற்று, அமோக வெற்றியை பதிவு செய்யவுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வாக்கு எண்ணிக்கையில், வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றிகளை குவித்து வருகின்றன.
அதிமுக தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் உட்பட தேனி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்த தேனி மாவட்டம் தற்போது திமுக வசம் சென்றுள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் உள்ள 177 வார்டுகளில் 58 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதுபோல பேரூராட்சிகளில் உள்ள 336 வார்டுகளில் திமுக 187 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் அதிமுகவை பொறுத்தளவில் நகராட்சிகளில் 20, பேரூராட்சிகளில் 59 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், முதன்முதலாக அறிவிக்கப்பட்ட சிவகாசி மாநகராட்சியில் திமுக 24, அதிமுக 11, காங்கிரஸ் 6, சுயேட்சை 4, மதிமுக, விசிக, பாஜக தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.