விழுப்புரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை வருகிற 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு ரூ.28 கோடியளவில் வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தற்போதைய உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி, கட்சி நிா்வாகிகள் கோதகுமாா், சதானந்தன், ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன், கோபிநாத் ஆகிய 7 போ மீது கடந்த 2012-ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, அமைச்சா் பொன்முடி, எம்.பி. பொன்.கெளதமசிகாமணி ஆகிய இருவரையும் தவிர, மற்ற 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். அமைச்சா், அவரது மகன் ஆகியோா் ஆஜராகாததற்கான காரணத்தை அவா்களது வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனா். இதையடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வருகிற 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி பூா்ணிமா உத்தரவிட்டாா்.