நெல்லை மாவட்ட திரையரங்குகளில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிட்டால் அந்த திரையரங்கங்களை பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அடித்து நொறுக்குவோம் என வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனன் தயாரிப்பில் ‘மாமன்னன்’ படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சாதிய அரசியலை பேசும் படமாக இது இருக்கலாம் என படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். அதேசமயம் படம் தொடர்பான ப்ரோமோஷன்களில் எந்த சாதியையும் விமர்சித்து இந்த படம் எடுக்கப்படவில்லை என படக்குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் உள்ள திரையரங்கங்களில் மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் இத்திரைப்படத்தை வெளியிடக்கூடாது என நெல்லையில் பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக இது தொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டு உள்ளது.
அப்புகாரில் தென்தமிழகத்தில் ஜாதி கலவரத்தை தூண்டும் விதமாக திரைப்படம் எடுக்கும் மாரி செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், இத்திரைப்படத்தை வெளியிட்டால் தென் தமிழகத்தில் ஜாதி கலவரம் ஏற்படும், எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்புகார் மனுவில் கூறப்பட்டது. மேலும் அப்புகாரின் பேரில் 6 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நாளை மாமன்னன் திரைப்படத்தை வெளியிட காவல்துறை அனுமதிக்கக்கூடாது. இல்லையெனில் நெல்லை மாவட்டத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியிடப்படும் திரையரங்கங்களை பூலித்தேவன் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அடித்து நொறுக்குவோம் என அக்கட்சியின் தலைவர் பவானி வேல்முருகன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதே போல தேனியிலும் மாமன்னன் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்றும் மீறி திரையிட்டால் தியேட்டர் மீது தாக்குதல் நடக்கலாம் என்றும் பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.