பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்களை வழங்கிய மாவட்ட ஆட்சியர் ..!

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தருமபுரி வட்டம், செம்மாண்ட குப்பம் கிராமத்தில் வசிக்கும் 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
தமிழ்நாடு அரசால் நரிக்குறவர், குருவிக்காரன் சமுதாயத்தினர் அனைத்து அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்களை பெற தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் இருந்து பழங்குடியினர் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ள நரிக்குறவன், குருவிக்காரன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்றிதழை அரசால் வெளியிடப்பட்ட நெறிமுறைகளை பின்பற்றி வழங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசால் மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவிலிருந்து தற்பொழுது பழங்குடியினர் பிரிவில் நரிக்குறவர்களுக்கு சாதிச்சான்று வழங்குவதால் ஏராளமான சலுகைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 21.06.2023 அன்று அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 133 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தருமபுரி வட்டாட்சியர் அலுவலம் சார்பில் 8 பழங்குடியின நரிக்குறவர் இன மக்களுக்கு சாதிச்சான்றிதழ்களை  மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
மேலும் தருமபுரி, அரூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட அனைத்து மண்டல துணை வட்டாட்சியர்களும் தங்களது வட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள நபர்கள் ஏற்கனவே குருவிக்காரன், நரிக்குறவர் நரிக்குறவன் சாதிச்சான்று அட்டையாக பெறப்பட்டிருப்பின் அதை ரத்து செய்து இ-சாதிச்சான்று வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசால் வழங்கப்பட்டுள்ள இந்நலத்திட்டங்களை  முழுமையாக பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் டி.கே.கீதாராணி, தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.