பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம்… நவீன ஆயுதங்கள் வாங்கும் இந்தியா-கடுப்பில் சீனா..!

ரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் மோடி, அந்த நாட்டுடன் பல்வேறு பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கிறார்.

இது நமது அண்டை நாடான சீனாவுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. என்ன ஒப்பந்தங்கள்… சீனா ஏன் பதற்றம் அடைகிறது… அலசுவோம்.

நான்கு நாள்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருக்கும் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து வரவேற்றிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அதேபோல பரஸ்பரம் பரிசுப் பொருள்கள் பரிமாற்றம், யோகா தின விழா, வெள்ளை மாளிகையில் பிரமாண்ட உணவு விருந்து, நாடாளுமன்ற உரை என மோடி – பைடனின் ஒவ்வொரு செயல்பாடும் உலக நாடுகளால் தொடர்ந்து கவனிக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, இந்தப் பயணத்தில் அமெரிக்கா – இந்தியாவுக்கிடையே கையெழுத்தாகியிருக்கும் ராணுவப் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் சீனாவின் கண்களைக் கடுமையாக உறுத்தியிருக்கின்றன.

மோடியின் அமெரிக்க வருகை உறுதிசெய்யப்பட்டதுமே, அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகனின் துணைச் செயலாளர் இலே ரேட்னர், “ பிரதமர் மோடியின் அமெரிக்க வருகை இந்திய-அமெரிக்க உறவில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும். இரு நாடுகளின் உறவுகளில் புதிய அத்தியாயங்கள் தொடங்கப்படும். இந்திய ராணுவத்தை நவீனப்படுத்த தேவையான உதவிகளை அமெரிக்கா வழங்கும். இரு நாடுகளின் பாதுகாப்பு உறவு தொடர்பாக விரைவில் மிகப்பெரிய அறிவிப்புகள் வெளியாகும். முக்கியமாக, இரு நாடுகளும் இணைந்து போர் விமானங்களுக்கான இன்ஜினைத் தயாரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுவருகிறது. பிரதமர் மோடியின் பயணத்தில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகும்!” எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில் அமெரிக்கா சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபருடன் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். குறிப்பாக, அமெரிக்காவின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சக்திவாய்ந்த எம்கியூ-9 ப்ரிடேட்டர் (MQ-9 Reaper Predator Drones) வகையின் 30 ஆளில்லா டிரோன் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. இந்த எம்கியூ-9 ப்ரிடேட்டர் வகை டிரோன்கள் 48 மணி நேரம் வரை தொடர்ந்து பறக்கும் திறனுடையது. சுமார் 50,000 அடி உயரத்துக்கும் மேலே வரை செல்லும். இடைவிடாமல் 6,000 கி.மீ வரை தொடர்ச்சியாகப் பறக்கும் சக்திவாய்ந்தது. இந்த எம்கியூ-9 டிரோன்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஏவுகணைகள் மூலம் வானிலிருந்தபடி, நிலத்தில் இருக்கும் பீரங்கிகள், படைகள் மற்றும் கடலில் இருக்கும் போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்ற இலக்குகளைக் குறிபார்த்து தாக்கி அழிக்கலாம். மேலும், இதில் லேசர் வெடிகுண்டுகளைப் பொருத்தி எதிரிகளின்மீது துல்லியத் தாக்குதல் நடத்தும் வல்லமையும் இந்த டிரோன்களுக்கு உண்டு.

ஏற்கெனவே கடந்த வாரம், இந்தியாவின் பாதுகாப்புக் கட்டமைப்பை பலப்படுத்தும் வகையில், அமெரிக்காவிடமிருந்து மூன்று பில்லியன் டாலர் (ரூ.24,500 கோடி) மதிப்பில் 31 அதிநவீன எம்கியூ- 9 ப்ரிடேட்டர் டிரோன்களை வாங்குவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, அமெரிக்காவிலுள்ள ஜிஇ ஏரோஸ்பேஸ் (GE Aerospace) என்ற விண்வெளி நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது. முன்னதாக, அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் அமெரிக்காவில் இருந்தபடியே, இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் (HAL) தயாரித்து வந்த தேஜஸ் ரக விமானங்களுக்கு வேண்டிய எஃப்-414 ரக இன்ஜின்களைத் தயாரித்து அனுப்பிவைத்துவந்தது. இந்த நிலையில், தற்போது போடப்பட்டிருக்கும் புதிய ஒப்பந்தத்தின் மூலம், போர் விமான இன்ஜின்களை இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முதல்கட்டமாக எஃப்-414 ரகத்தைச் சேர்ந்த 99 இன்ஜின்கள் இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா முடிவுசெய்திருக்கிறது.

இது தவிர, இரு நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களான இஸ்ரோவும் நாசாவும் இணைந்து செயல்படும் வகையில், ஆர்டிமிஸ் திட்ட ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருக்கிறது. மேலும், சீனா சொந்தம் கொண்டாடிவரும் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க செனட் குழு பரிசீலிக்க முடிவுசெய்திருக்கிறது.

இந்த நிலையில், இந்தியாவும் அமெரிக்காவும் ராணுவப் பாதுகாப்புரீதியில் நட்பு பாராட்டுவது, இரு நாடுகளுக்கும் பரம எதிரிகளாகச் சித்திரிக்கப்படும் சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவிக்கும் உலக அரசியல் நோக்கர்கள், “சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பனிப்போரை அமெரிக்கா கூர்தீட்டுவதாக சீனா கருதுகிறது. இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சுட்டு வீழ்த்தப்பட்ட சீன உளவு பலூன் விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சர்வாதிகாரி என விமர்சித்திருக்கிறார். இதற்கு சீனா, `ஜோ பைடனின் கருத்து சீனாவின் அரசியல் கண்ணியத்தை மீறிய, முற்றிலும் அபத்தமானது. உண்மைக்கு எதிரான பேச்சு! அப்பட்டமான அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சி!’ எனக் கண்டித்திருக்கிறது. இது வார்த்தைப்போருடன் நிற்காமல் சீனாவும் பதிலுக்கு ஆயுதக் குவிப்பிலும், பதற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட வாய்ப்பிருக்கிறது!” என எச்சரிக்கிறார்கள்.