சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், நிர்வாக காரணத்திற்காக செந்தில் பாலாஜியின் துறைகள் மட்டும் பிற அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டு துறையில்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி.ஜெயவர்த்தன் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், செந்தில்பாலாஜி மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பதால் மக்கள் வரிப்பணம் வீணாகும். செந்தில் பாலாஜி அமைச்சராக இருப்பதால் நீதிமன்ற காவலில் இருக்கும் போது ரகசிய கோப்புகளை அணுக இயலும். இலாகா மாற்றத்திற்கு பிறகு செந்தில் பாலாஜியை அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழகம் முழுவதும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி நேற்று முன்தினம் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.