கனமழையால் எவ்வித சேதமும் இல்லை – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேட்டி..!

சென்னை: கனமழை காரணமாக எந்த மாவட்டத்திலும் தற்போது வரை எவ்வித சேதமும் இல்லை என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சென்னையில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,”சென்னையில் கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. இதை வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரிப்பன் மாளிகையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையிலும் தகவல் பெறப்பட்டுள்ளது. தற்போது வரை உயிர் இழப்பு மற்றும் சேதங்கள் இல்லை.

நகராட்சிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயாராக உள்ளனர். எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்து 24 மணிநேரமும் கண்காணித்து வருகிறோம். கடந்த மழையின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையில் 40 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். கனமழை காரணமாக எந்த மாவட்டத்திலும் தற்போது வரை சேதம் இல்லை. பருவம் தவறிய மழை மற்றும் திடீர் மழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.