பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்தும் புதிதாக ஆராயவும், அதன் மீதான பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளின் கருத்துகளை தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
நாட்டில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென மதச் சட்டங்களைப் பின்பற்றுகின்றன. அவற்றுக்குப் பதிலாக எல்லோரும் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது. அதாவது, அனைத்து மதத்தை சோந்தவா்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை தொடா்பாக நாடு முழுவதும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. இதற்கு பல வகையில் ஆதரவுகளும் எதிா்ப்புகளும் எழுந்துள்ளன.
அதனைத் தொடா்ந்து, இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான சாத்தியகூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு சட்ட ஆணையத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இதன் அடிப்படையில் கருத்துகளை கேட்டறிந்த 21வது சட்ட ஆணையம், அது தொடா்பான ஆலோசனை அறிக்கையை கடந்த 2018-ம் ஆண்டு வெளியிட்டது. ஆனாலும், தொடா் எதிா்ப்பு, நீதிமன்ற வழக்குகள் காரணமாக இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை உருவானது.
2018-ம் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.சௌஹான் தலைமையிலான 21வது சட்ட ஆணையம் சமர்ப்பித்த கடைசி அறிக்கையில் ‘பொது சிவில் சட்டம் இந்த கட்டத்தில் அவசியமில்லை அல்லது விரும்பத்தக்கது அல்ல’ என்று குறிப்பிட்டது. மேலும் தனிப்பட்ட மத சட்டங்களில் உள்ள பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையை சமாளிக்க, மதங்களில் இருக்கும் குடும்பச் சட்டங்கள் திருத்தப்பட்டு குறியிடப்பட வேண்டும் என்று அந்த ஆணையம் பரிந்துரை செய்தது.
இதனை தொடர்ந்து, 21வது சட்ட ஆணையத்தில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு 4 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. இந்நிலையில் இந்த பொது சிவில் சட்டத்தின் அவசியம் மற்றும் அதன் மீது பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளிடம் இருந்து புதிதாக கருத்துகளைக் கேட்க பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் தற்போது 22வது சட்ட ஆணையம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்று இந்திய சட்ட ஆணையம் ஒரு ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று இந்த இந்த சட்டம் குறித்து மீண்டும் ஆய்வு செய்யத் தொடங்கியது. இந்த 22வது சட்ட ஆணையத்தின் பணிக்காலம் 3 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கும் பணியை இந்த ஆணையம் தொடங்கியுள்ளது.
ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் கருத்துக்களை முன்வைக்கலாம் என்று அது மேலும் கூறியுள்ளது.