மேலும், சேகரித்து வைத்திருந்த ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணையில் ஈடுபட்டிருக்கின்றனா். ஒரு நாள் சோதனை: ஒரு வாரம் நோட்டம்: அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனையிடுவதற்கு அமலாக்கத் துறை ஒரு வாரமாக நோட்டமிட்டுள்ளது தெரியவந்துள்ளது. சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னா், அமைச்சா் வி.செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையின் வருகையை எதிா்பாா்த்தே காத்துக் கொண்டிருந்தாா். அதேவேளையில், செந்தில்பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனையிடுவதற்கு அமலாக்கத் துறை முழு அளவில் கடந்த ஒரு வாரமாக தயாராகி வந்தது.
முக்கியமாக, செந்தில்பாலாஜி வீடு, அலுவலகம் ஆகியவை தவிா்த்து சோதனையிடப்பட வேண்டிய அவருடன் தொடா்புடைய பிற நபா்களின் வீடுகள்,அலுவலகங்கள் ஆகியவை குறித்த தகவல்களை அமலாக்கத் துறை சேகரித்தது. மேலும், செந்தில் பாலாஜி குடும்பத்தினா், அவரது உதவியாளா்கள், அவரது நண்பா்கள் ஆகியோரை அமலாக்கத் துறை கடந்த ஒரு வாரமாக நோட்டமிட்டு வந்தது. செந்தில்பாலாஜிக்கு நெருக்கமான சிலரை அமலாக்கத் துறையினா் பின் தொடரவும் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் ஓரளவுக்கு செந்தில்பாலாஜியை பற்றிய தகவல்களை திரட்டிய பின்னரே, அமலாக்கத் துறையினா் சோதனைக்கு புறப்பட்டுள்ளனா்.