தமிழக பாஜ தலைவர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் கூட்டணி உடையும் – ஜெயக்குமார் எச்சரிக்கை
சென்னை: ஜெயலலிதா மோசமான ஊழல் முதல்வர். ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் என்று பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். அதோடு, அதிமுக மாஜி அமைச்சர்களின் ஊழல் பட்டியலையும், சொத்துப் பட்டியலையும் வெளியிடப்போவதாக அறிவித்தார். இது அதிமுக – பாஜ கூட்டணியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அண்ணாமலையை கட்டுச் ேசாற்று பெருச்சாளி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், அதிமுக கூட்டணியில் இருந்து பாஜவை கழற்றி விடுவது குறித்து முடிவு செய்வோம் என்றும் எச்சரித்துள்ளார்.
பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில பத்திரிகைக்கு நேற்று முன்தினம் ஒரு பேட்டி அளித்திருந்தார். திமுகவினர் மீது குற்றச்சாட்டை கூறிய நீங்கள், தமிழ்நாட்டை ஆண்ட பிற கட்சிகளின் மாஜி அமைச்சர்களின் சொத்து பட்டியல் மற்றும் ஊழல்களையும் வெளியில் கொண்டு வருவதும் அதில் ஒரு பகுதியாக இருக்கும் என்று கூறினீர்கள். அது எப்போது வெளியிடப்படும் என்று நிருபர் கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, ‘எந்த கட்சிக்கும் எதிராக நாங்கள் இந்த பட்டியலை வெளியிடவில்லை. நாங்கள் ஊழலுக்குத்தான் எதிரானவர்கள். கட்சிகளுக்கு எதிரானவர்கள் இல்லை’ என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் செய்தவர்களின் பட்டியலையும் வெளியிடுவோம் என்பதை அண்ணாமலை மறைமுகமாக தெரிவித்துள்ளதோடு, அதிமுக என்று கட்சி குறிப்பிட்டெல்லாம் பார்ப்பது இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.இதனால் நிருபர் வெளிப்படையாக, ‘அதிமுகவும் கூடவா..’ என்றபோது, நான் எந்த கட்சியின் பெயரையும் குறிப்பிடவில்லை, ஆனால் எந்த அரசும் மக்களின் பணத்தை மோசடி செய்தால் நாங்கள் கேள்வி கேட்போம்’ என்று அண்ணாமலை பதில் அளித்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் மோசமான நிர்வாகமும், லஞ்சமும் தலைவிரித்தாடியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இதனால் அவர்கள் ஊழல் செய்ததையும் கேள்வி கேட்போம் என்று அண்ணாமலை வெளிப்படையாக அதிமுகவினர் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்.
மேலும், நிருபர் தொடர்ந்து கேள்வி கேட்கும்போது, கடந்த 1991-96 தான் மோசமான ஊழல் ஆட்சிக் காலம் என்று ஒப்புக் கொள்கிறீர்களா என்றபோது, அப்போதுதான், ஊழல் தமிழ்நாட்டில் மிகவும் மோசமானதாக மாறியிருந்தது. முன்னாள் முதல்வர் (ஜெயலலிதா) நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளார். அதனால் தமிழ்நாடு ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது என்று அண்ணாமலை, ஜெயலலிதா மீது நேரடியாகவே தாக்குதல் தொடுத்துள்ளார். ஏற்கனவே, ஜெயலலிதாவும், நானும் ஒன்று என்று அண்ணாமலை சில மாதங்களுக்கு முன்னர் பேட்டியளித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது ஜெயலலிதா ஆட்சிக்காலம்தான் மோசமான ஆட்சிக்காலம் என்று தாக்கியதோடு அவர் ஊழலுக்காக தண்டிக்கப்பட்டவர் என்றும் தாக்கியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி வரும் அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கடந்த சில மாதங்களாக மோதல்போக்கு இருந்து வந்தது. சமீபத்தில், அண்ணாமலையின் பிறந்த நாளுக்கு கூட எடப்பாடி பழனிசாமி வாழ்த்துச் சொல்லவில்லை. இப்படி இரு கட்சியினருக்கும் மோதல் இருந்துவரும் நிலையில், ஜெயலலிதாவையும், அதிமுக மாஜி அமைச்சர்களையும் அண்ணாமலை தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது, எடப்பாடிக்கும், எனக்கும் கடும் போட்டி இருக்கிறது. நான் கட்சியை வளர்க்க வேண்டும். கூட்டணி கட்சியுடன் தொடர்ந்து பயணித்தால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்றும் கூறியிருந்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டணியில் இருந்து பாஜ வெளியேறுமா அல்லது நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவை பாஜ கழற்றி விடுமா என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக பாஜ தலைவர் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் கொதித்துப்போய் இருக்கும் நிலையை அண்ணாமலை இன்றைக்கு உருவாக்கி இருக்கிறார். இதற்கு முன்பாக பாஜ தலைவர்களாக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்திரராஜன், முருகன் ஆகியோர் தோழமை உணர்வோடு, ஒரு கூட்டணி கட்சியில் இருந்து விமர்சனம் செய்யாமல், கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால், அண்ணாமலை பொறுப்பேற்ற நாளில் இருந்து கூட்டணி தர்மத்தை மீறி தான் செயல்படுகிறார்.
தொண்டர்கள் மனம் பாதிக்கும் வகையில் ஜெயலலிதாவை விமர்சிப்பதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வன்மையாக கண்டிக்கத்தக்க விஷயமாகத்தான் ஒவ்வொரு தொண்டனும் கருதுகிறான். அந்த அடிப்படையில் இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பாஜவின் அகில இந்திய தலைவர் நட்டாவும் உரிய வகையில் அண்ணாமலையை கண்டிக்க வேண்டும். கூட்டணி தர்மத்தை மீறுகின்ற வகையில் அண்ணாமலை செயல்படும்போது, அதிமுக – பாஜ கூட்டணி தொடருகிறதா என்ற கேள்வி நிச்சயமாக எழும். கடந்த 3 ஆண்டுகளாக அண்ணாமலையின் செயல்பாடுகளை பார்க்கும்போது நிச்சயமாக கூட்டணி தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகத்தான் உள்ளது.
ஒரு மாநில தலைவருக்கான தகுதி இல்லாதவர்தான் இந்த அண்ணாமலை. வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். பாஜ – அதிமுக கூட்டணி தொடரக்கூடாது, பிரதமராக மோடி வரக்கூடாது என்று அண்ணாமலை நினைக்கிறாரா? அப்படித்தான் அண்ணாமலையின் பயணம் இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலை கர்நாடக தேர்தலுக்கு பொறுப்பாளராக சென்றார். கர்நாடகவில் பாஜ ஜெயித்ததா? இவர் போன ராசி கர்நாடகாவில் அம்போ ஆயிடுச்சு. கிட்டத்தட்ட 40 சதவீதம் கமிஷனை பாஜவினர் வாங்குகிறார்கள் என்று ஒரு அசோசியேஷனே கடிதம் எழுதியது கர்நாடகாவில். அதைப்பற்றி அண்ணாமலை பேச வேண்டியதுதானே. ஊழல் பற்றி பேசுகிறார், இவர் போன மாநிலம் கர்நாடகா.
அந்த மாநிலத்தில் 40 சதவீதம் கமிஷன் வாங்குகிறார்கள், அதில் ஒரு கான்ட்ராக்டர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு போய்விட்டார். அந்த அரசாங்கத்தை பற்றி பேசுங்க. அங்கு நடந்த ஊழல் பற்றி பேசுங்க. மறைந்த தலைவரை பற்றி பேசுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவரை பாஜவால் தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் போக முடிந்ததா, சட்டமன்றத்தில் 20 வருஷத்துக்கு பிறகு பாஜவுக்கு 4 சீட் கிடைத்ததற்கு யார் காரணம், அதிமுக தானே காரணம். தமிழ்நாட்டில் எங்கள் தலைமையிலான கூட்டணியில் இருக்கும்போதுதான் பாஜவுக்கு ஒரு அடையாளமே கிடைத்தது. அமித்ஷாவும், நட்டாவும் அவரை கண்டிக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு கூட்டணி குறித்து… (கூட்டணியில் இருந்து பாஜவை கழற்றிவிடுவது) நான் சொல்ல தேவையில்லை. அதுபற்றி உரிய நேரத்தில் அதிமுக கட்சி முடிவு செய்யும். கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி டெல்லியில் அமித்ஷாவை சந்திக்க போனார்.
அந்த நேரத்தில் அண்ணாமலையும் வந்தார். ஆனால் இன்று, பெரிய அளவுக்கு பிரச்னையை யார் உருவாக்கினார் என்பதுதான் முக்கியம். நாங்கள் ஏதாவது பேசினோமா, எங்கள் தரப்பில் இருந்து பாஜவை விமர்சனம் செய்வது இல்லை. ஆனால், எங்கள் கட்சியை சீண்டினால் நாங்கள் பதிலடி கொடுக்கிறோம். எதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனால், வாயை அடக்கிட்டு ஒழுங்கா நீங்கள் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தால் நல்லது. இல்லையென்றால் எங்களுக்கு இழப்பே கிடையாது. அண்ணாமலைக்கு பல விஷயங்களில் வாய், நாக்கு நீளம், வாய் சவடால், நாவடக்கம் இல்லை. பக்குவம் இல்லாதவர். கட்டு சோற்றில் கட்டின பெருச்சாளி மாதிரி நொய் நொய்ங்கிறாரு.
இதற்கெல்லாம் வாங்கி கட்டியிருக்கிறார் அவர். இனிமேலும் எதுவும் பேசினால் கண்டிப்பாக வாங்கி கட்டுவார். இதோட பேசுறத நிறுத்தணும். அண்ணாமலையை பொறுத்தவரை அதிமுக கூட்டணியே வேண்டாம் என்கிறார். அதிமுக ஒரு ஆலமரம். பாஜ ஒரு செடி. இவ்வாறு ஜெயக்குமார் கூறினார். அண்ணாமலைக்கு அதிமுக தொண்டர்கள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் கடும் தாக்குதல் தொடுத்து வருகின்றனர். புதுச்சேரியில் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக மாநில தலைவர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார். தமிழகத்திலும் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதனால் அண்ணாமலை வேண்டும் என்றே இந்த பேட்டி மூலம் மோதலை உருவாக்கி, கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம் தீட்டியிருக்கலாம் என்று தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கட்டுச் சோத்து பெருச்சாளி அண்ணாமலைக்கு பல விஷயங்களில் வாய், நாக்கு நீளம், வாய் சவடால், நாவடக்கம் இல்லை. அண்ணாமலை ஒரு பக்குவம் இல்லாதவர். அண்ணாமலை, கட்டு சோற்றில் கட்டின பெருச்சாளி மாதிரி நொய் நொய்ங்கிறாரு என்று ஜெயக்குமார், அண்ணாமலையை ஒரு பிடிபிடித்துள்ளார்.
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை; அண்ணாமலைக்கு ஓபிஎஸ் கண்டனம்
ஜெயலலிதாவை தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது என்று ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதா பற்றியும், அதிமுக ஆட்சியை பற்றியும் தரக்குறைவாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்துக்கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவிடம் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தனர். ஜெயலலிதாவும் அனைவரின் மீதும் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தார். பல அரசியல் கட்சி தலைவர்கள் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான போயஸ் தோட்டத்திற்கு வந்து சென்றுள்ளனர். அவருடைய ஆட்சியை தரக்குறைவாக அண்ணாமலை விமர்சித்திருப்பது கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. மனம் போன போக்கில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதை இனி வருங்காலங்களில் அண்ணாமலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.