காஞ்சிபுரம்: பலத்த சூறாவளிக்காற்று காரணமாக சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே சின்னையன் சத்திரம் பகுதியில் காற்றாலைகளை ஏற்றிச் சென்ற 3 கனரக லாரிகள் திங்கள்கிழமை இரவு கவிழந்தன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த இடியுடனும் சூறாவளிக் காற்றுடனும் மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. சம்பவ நாளன்று இரவும் பலத்த சூறாவளிக் காற்று வீசிக் கொண்டிருந்தது. அப்போது சென்னையிலிருந்து பெங்களூர் நோக்கி காற்றாலைகளை ஏற்றிக்கொண்டு சென்ற 3 கனரக லாரிகள் பலத்த சூறாவளிக்காற்று காரணமாக அடுத்தடுத்து சாலையோரம் கவிழந்தது.தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகேயுள்ள சின்னையன் சத்திரம் என்ற இடத்தில் நடந்த இவ்விபத்தில் வடமாநிலங்களைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் காயமின்றி உயிர் தப்பினர். நள்ளிரவு நேரத்தில் விபத்து நடந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். காற்றாலையுடன் சாலையோரம் சாய்ந்த கனரக லாரிகளை மீட்கும் பணியும் நடைபெற்று வருகிறது.