உச்சம் தொட்ட பொருளாதார நெருக்கடி… பிரபல ஓட்டலை 3 ஆண்டிற்கு குத்தகைக்கு விட்ட பாகிஸ்தான்..!

பாகிஸ்தானின் பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், அந்நாட்டு அரசு தற்போது கடும் நிதி சிக்கலை சமாளிக்க வழி தெரியாமல் கையைப் பிசைந்துக் கொண்டிருக்கிறது.

அடிப்படை வசதிகள், உணவு பொருட்கள் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த நிலையில், பணவசதி இல்லாத பாகிஸ்தான், தனக்கு சொந்தமான நியூயார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் ஹோட்டலை குத்தகைக்கு விட்டுள்ளது. இதன் மூலம் 220 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கிடைக்கும் என்பதால், வேறு வழியில்லாத நிலையில் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் அரசு தள்ளப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அரசு நடத்தும் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (PIA) 1979 இல் ரூஸ்வெல்ட் ஹோட்டலை குத்தகைக்கு எடுத்து இயக்கி வந்தது, அதில் நல்ல லாபம் கிடைத்து வந்த நிலையில், இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அந்த ஹோட்டலை பாகிஸ்தான் அரசு விலைக்கு வாங்கியது.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட்டின் பெயரிடப்பட்ட ரூஸ்வெல்ட் ஹோட்டல், 1924 முதல் நியூயார்க்கின் மன்ஹாட்டனில் ஒரு முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள குத்தகை ஒப்பந்தத்தின் கீழ், நியூயார்க் நகர நிர்வாகம் மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஹோட்டலை நடத்தும். “குத்தகை ஒப்பந்தம் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு சுமார் 220 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பாகிஸ்தான் அரசின் ரயில்வே மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் கவாஜா சாத் ரபீக் செய்தியாளர் சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை அறிவித்தார்.

“1,250 அறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்று ஆண்டு கால குத்தகை காலம் முடிவடைந்தவுடன், ஹோட்டல் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்படும்,” என்று ஜியோ டிவி மேற்கோளிட்டுள்ளது.

2020 இல் கொரோனா தொற்றுநோய் காலத்தின் போது ரூஸ்வெல்ட் ஹோட்டல் மூடப்பட்டது, புலம்பெயர்ந்தோர் தங்குவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்பட்டது. ஹோட்டலின் வருடாந்த செலவுகள் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், தற்போதுள்ள பொறுப்புகள் 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனவும் அமைச்சர் கூறினார்.

தற்போது, பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நிலையை சமாளிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசு நியூயார்க்கில் உள்ள ரூஸ்வெல்ட் ஹோட்டலை நியூயார்க் நகர நிர்வாகத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது, 220 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதிக்க உதவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

ரூஸ்வெல்ட் ஹோட்டலை குத்தகைக்கு விடுவது, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் பெரிய திட்டங்களின் ஒரு பகுதியாகும். நாடு திவாலாவதைத் தடுக்கும் நோக்கில், 1.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பிணை எடுப்புப் பொதியில், பணப் பற்றாக்குறையில் உள்ள பாகிஸ்தானும், சர்வதேச நாணய நிதியம் IMFம், ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டத் தவறிவிட்டன.

இந்த நிதியானது 2019 ஆம் ஆண்டில் IMF அங்கீகரித்த 6.5 பில்லியன் அமெரிக்க டாலர் பிணை எடுப்புப் பொதியின் ஒரு பகுதியாகும், இது வெளிநாட்டுக் கடன் கடமைகளைத் திருப்பிச் செலுத்துவதைத் தவிர்க்க பாகிஸ்தான் மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பாகிஸ்தான், தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது, அதிக வெளிநாட்டுக் கடன், பலவீனமான உள்ளூர் நாணயம் அந்நாட்டின் நிலைமையை மோசமாக்கியிருக்கும் நிலையில், ஒரு மாத இறக்குமதிக்குக் கூட போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லை என்ற நிலை, நிலைமையை மோசமாக்கி வருகிறது.

மார்ச் மாதத்தில் 35.4 சதவிகிதமாக இருந்த பாகிஸ்தானின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 36.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்களின் விலைகளால் இந்த பணவீக்கம் அதிகரித்துள்ளது என்று நாட்டின் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த அளவிலான பணவீக்கம் தெற்காசியாவில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.