கோவையில் நிதிநிறுவனம் நடத்தி ரூ 20 கோடி மோசடி- 2 பேர் கைது..!

கோவை புது சித்தாபுதூர் ,பாரதியார் ரோட்டில் ” டெய்சி மேக்ஸ் கேப்பிட்டல்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனராக செந்தில்குமார் அவரது மனைவி லலிதா, கோகுல், பாலு ,’நாகராஜ், ஆனந்தராஜன் ஆகியோர் பங்குதாரர்களாகவும் செயல்பட்டனர். பொதுமக்களிடமிருந்து அதிக வட்டி தருவதாக முதலீடு பெற்றுள்ளனர் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 90 நாட்களில் ரூ.2 லட்சம் தருவதாக கூறி ஆசை வார்த்தை காட்டினார்கள். இதை நம்பி 1500 க்கும் மேற்பட்டவர்கள் ரூ.20 கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளனர். முதலீட்டு தொகை மற்றும் வட்டி தொகை ஆகியவற்றை திருப்பிக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து வருகிறார்கள். மோசடி நிறுவனத்தின் பங்குதாரராக செயல்பட்ட கோவையை சேர்ந்த ஆனந்தராஜன் கோவை கணபதி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி சேர்ந்த கோகுல் ( வயது 47 ) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிறுவன மோசடி தொடர்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு நிர்வாக இயக்குனர் செந்தில் குமார் மற்றும் அவரது மனைவி லலிதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மோசடி பணத்தில் வீடு, கார், தோட்டம் உள்ளிட்ட ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இது குறித்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..