மேகதாது விவகாரம்… தமிழகத்தை உரசிப் பார்க்கிறார் டி.கே.சிவக்குமார்- அமைச்சர் துரைமுருகன் பேச்சு.!

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அரசு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பதவியேற்ற சில நாட்களுக்கு உள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசி பார்க்கும் காரியத்தை செய்வது ஆச்சரியமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

காவிரி பிரச்னையை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளில் மேகதாது பற்றி குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன், மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கு உரிமையுள்ள கட்டுப்பாடற்ற நீர்ப்பிடிப்பு பகுதியில் மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கூறுவது வரவேற்கத்தக்கதல்ல என்றும் கூறியுள்ள அமைச்சர் துரைமுருகன், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விரைவில் டி.கே.சிவக்குமாரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது, இந்த பிரச்னையை பற்றி விரிவாக பேசலாம் என்று கருதுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் துரைமுருகன், சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.