கோவையில் கஞ்சா விற்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை வெரைட்டி ஹால் ரோடு போலீசார் கடந்த 2019 – ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 – ந் தேதி வாலிபர் ஒருவர் சி.எம்.சி காலனிக்கு செல்லும் சாலையில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கோவை பழைய மேம்பாலத்தில் இருந்து சி.எம்.சி காலனிக்கு செல்லும் வழியில் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்தார்.

அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் வெரைட்டிஹால் ரோடு சிரியன் சர்ச் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

மேலும் அவர் வைத்து இருந்த மஞ்சள் நிற துணிப் பையை போலீசார் சோதனை செய்ததில் ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை இன்றியமையா பொருட்கள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணைகள் நிறைவு அடைந்தது. இதையடுத்து தீர்ப்பு கூறப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி லோகேஸ்வரன், குற்றம் சாட்டப்பட்ட சதீஷ்குமாருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.