புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு..!

சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமிக்கு எதிராக, தமிழகமின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, புதிய தமிழகம் கட்சி சார்பில் அண்மையில் சென்னையில் பேரணி நடத்தப்பட்டது. பேரணி முடிவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, 250 பக்கங்கள் கொண்ட புகார் மனுவை வழங்கினார்.

அதில், ‘தமிழகத்தில் டாஸ்மாக்கில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இதில் தொடர்புடைய அனைவரின் மீதும் வழக்குத் தொடர ஆளுநர் அனுமதி அளிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக, தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மதுபானங்களில் 60 சதவீத மதுபானங்களுக்கு மட்டும் ஆயத்தீர்வை வசூலிக்கப்படுகிறது. மீதம் 40 சதவீத மதுபானங்களுக்கு ஆயத்தீர்வை வசூலிக்கப்படுவதில்லை. இதுபோன்ற முறைகேடுகளால் டாஸ்மாக்கில் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, ஆளுநரிடம் புகார் அளித்துள்ளார்.

மேலும், அந்தப் புகாரை அவரது கட்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். ட்விட்டர் பக்கத்திலும் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டுள்ளார். டாஸ்மாக்கில் முறைகேடுகள் நடப்பதாக பத்திரிகைகளுக்கும் பேட்டி அளித்திருக்கிறார்.

இதன்மூலம் எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளார். எனக்கு எதிராக அவதூறு கருத்துகளைத் தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.