இன்னும் 5 மாசம் தான்.. காங்கிரஸ் ஆட்சியே மாறபோது… கர்நாடகா இழுபறி.. பசவராஜ் பொம்மை சொன்ன பரபரப்பு தகவல்..!

பெங்களூர் : கர்நாடகாவில் அமைச்சரவை அமைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் ஆலோசித்து வரும் நிலையில், காங்கிரஸ் அரசு முழு பதவி காலத்தையும் முடிக்க முடியாது என முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவக்குமாரும் அண்மையில் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இந்நிலையில், அமைச்சரவையை விரிவாக்குவது, இலாகா ஒதுக்குவது தொடர்பாக சித்தராமையா, டிகே சிவக்குமார் ஆகியோர் டெல்லிக்குச் சென்று காங்கிரஸ் மேலிடத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செல்லும் பாதை சரியில்லை என்றும், இன்னும் 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும் என்றும் முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஹாவேரி மாவட்டம் சிக்காவியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இலவச திட்டங்களை நிறைவேற்றுவோம் என மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்திருந்தனர்.

அமைச்சரவை கூட்டத்தில் இலவச திட்டங்களுக்கு ஒப்புதல் மட்டும் அளித்துவிட்டு, அமல்படுத்திவிட்டது போல் நாடகமாடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக பாஜக தலைவர்கள், தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். பழிவாங்கும் அரசியலில் காங்கிரஸ் ஈடுபடுகிறது.

பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய திட்டங்கள், வளர்ச்சி பணிகளை நிறுத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். பல்வேறு தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் பாஜக தோல்வி அடைந்திருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். அந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இன்னும் 4 அல்லது 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படுவது உறுதி.

தற்போது காங்கிரஸ் ஆட்சி செல்லும் பாதை சரியாக இல்லை. அவர்கள் ஆட்சி நடத்தும் விதம், பதவி தொடர்பான மோதல் காரணமாக காங்கிரஸ் ஆட்சி நீண்ட நாட்கள் நீடிக்க வாய்ப்பில்லை. இன்னும் 5 மாதங்களில் கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும்.

புதிய அமைச்சர்கள் புதிதாக திருமணமான மருமகளைப் போன்று, அவர்களுக்கு கருவூலத்தின் சாவியோ அல்லது பொறுப்புகளோ இன்னும் தரப்படவில்லை. அமைச்சர்கள் எந்த இலாகாவும் இல்லாமல் உட்கார வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.