தாம்பரம் அடுத்த முடிச்சூரில் சுமார்5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.29 கோடிசெலவில் ஆம்னி பேருந்து முனையம் ஜூலை மாதத்துக்குள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24-ம் நிதியாண்டின் அறிவிப்பின்படி தாம்பரம் அருகே முடிச்சூர், வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் ரூ.29 கோடி மதிப்பீட்டில் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான முனையம் அமையவுள்ளது. அதற்கான இடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்றுஆய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து முடிச்சூர், சீக்கனான் ஏரியை ரூ.2 கோடியிலும் முடிச்சூர், இரங்கா நகர்குளத்தினை ரூ.1.50 கோடி மதிப்பிலும் மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல், ஈஸ்வரி நகரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைப்பது தொடர்பாகவும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர், புது தெருவில் ரூ.10கோடி மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் அமைப்பது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது: முடிச்சூரில் சுமார் 5 ஏக்கர்நிலப்பரப்பில் ரூ.29 கோடி செலவில் ஆம்னி பேருந்து நிலையம் அமைப்பதற்கு களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த முனையத்துக்கு வரும் பேருந்துகளின் போக்குவரத்தைகருத்தில் கொள்ளாமல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
ஆகவே, இந்த பேருந்து நிலையத்துக்கான அணுகு சாலைகள், போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்கு உண்டான திட்டமிடல் போன்றவற்றை கணக்கிட்டு ஏற்பாடு நடக்கிறது. ஜூன் அல்லது ஜூலை மாதத்துக்குள் முடிந்த அளவுக்கு ஏற்பாடுகளை முடித்து, பேருந்து நிலையங்களை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வுகளின்போது சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, துணை மேயர் கோ.காமராஜ் ஆணையர் ஆர்.அழகுமீனா, சிஎம்டிஏ தலைமைத் திட்ட அமைப்பாளர் எஸ்.ருத்ரமூர்த்தி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், முதுநிலைத் திட்ட அமைப்பாளர் அனுசுயா மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.