டெல்லி: கடல் பரப்பில் சூப்பர் சோனிக் வேகத்தில் பறக்கும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையை இந்திய கடற்படை இன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்திருக்கிறது.
வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் என மூன்று முக்கிய கடல்களை எல்லையாக கொண்டிருக்கும் இந்தியாவுக்கு கடற்படையை வலுவாக கட்டமைக்க வேண்டியது அவசியமாகும். இந்தியாவில் கடல் சார்ந்த வணிகத்தில் தமிழ்நாடு மிக முக்கிய பங்கு வகித்திருக்கிறது. மற்ற மாநிலங்களில் கப்பல்கள் இருந்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில், தமிழ்நாட்டில் சோழர்களின் ஆட்சி காலத்தில் அதாவது சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வணிகர்கள் கடல் தாண்டி சீனா மற்றும் பல மேற்கு ஆசிய நாடுகளுடன் வணிகம் செய்து வந்துள்ளனர்.
வணிகம் மட்டுமல்லாது கடல் கடந்து போர்களும் நடைபெற்றுள்ளது. இப்படி தொடங்கிய இந்திய கடற்படையின் வரலாறு தற்போது மிகச்சிறப்பாக மேம்பட்டிருக்கிறது. கடற்படையில் வெறும் கப்பல்கள் மட்டுமல்லாது பல்வேறு புதிய பாதுகாப்பு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணையை இந்திய கடற்படை ஐஎன்எஸ் மோர்முகவோ கப்பலிலிருந்து ஏவி சோதனை செய்து பார்த்திருக்கிறது. இது வெற்றியடைந்துள்ளது.
இந்த ஏவுகணை சூப்பர் சோனிக் வேகத்தில் செல்லும் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 1,236 கி.மீ வேகத்தில் செல்வது சூப்பர் சோனிக் வேகம் எனப்படுகிறது. இது மாக்-1 வேகம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் ஏவுகணை தாக்குதலிலிருந்து தப்பிக்கவும், ஒரு இடத்தில் குண்டை வீசிவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பித்து செல்லவும் இந்த வகை விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான்.
அவ்வளவு பெரிய வானத்தில் மணிக்கு 1,236 கி.மீ வேகத்தில் பயணித்து கொண்டிருக்கும் ஒரு விமானத்தை கண்டுபிடித்து அழிப்பது சவாலான விஷயம்தான். இப்படி இருக்கையில், இந்த சவாலை சமாளிக்க பாதுகாப்பு ஆராய்ச்சித்துறை புதிய ஏவுகணையை வடிவமைத்துள்ளது. இந்த ஏவுகணை சூப்பர் சோனிக் வேகத்தில் செல்லும் இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும். இதன் சிறப்பம்சம் என்னவெனில் இந்த ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.
இது குறித்து கடற்படையினர் கூறுகையில், இந்த ஏவுகணை இந்திய கடற்படையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் நாட்டின் கடற்படையானது மேலும் வலுவடையும் என்று கூறியுள்ளது. ஏற்கனவே இலங்கையையொட்டியுள்ள இந்திய பெருங்கடல் பரப்பில் சீன ராணுவத்தின் சில கப்பல்கள் அடிக்கடி முகாமிட்டு செல்கிறது. எனவே இதற்கு பதிலடி கொடுக்க இந்த ஏவுகணையால் முடியும் என்று கடற்படை வலுவாக நம்புகிறது.