சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தை டிடிவி தினகரன் துரோகி என்றார். திமுக எங்கள் எதிரி, டி.டி.வி. துரோகி என்று ஒபிஎஸ் கூறினார்.
துரோகிகள் என மாறி, மாறி கூறியவர்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளனர். அதிமுகவை அவர்களால் கைப்பற்ற முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
நகமும் சதையுமாக இருந்தவர்களுக்கு எதையும் செய்யாதவர் வைத்திலிங்கம். வைத்திலிங்கம் எவருக்கு எந்த நல்லதும் செய்யக்கூடாது என்று எண்ணும் நபர். இப்படிப்பட்ட நபரை என் வாழ்க்கையில் நான் பார்த்ததே கிடையாது. தன்னை பதவியில் அமர்த்திய யாருக்கும் உதவி செய்யாதவர்தான் வைத்திலிங்கம்.
திருச்சி மாநாட்டில் ஒபிஎஸ்சும் வைத்திலிங்கமும் என்னை திட்ட மட்டுமே செய்தனர். என்னை திட்டி எந்த பிரயோஜனம். நான் சாதாரண தொண்டன். ஒரு விவசாயி.. உங்களை போல நான் அதிகாரத்திற்காக அலையவில்லை. அதிகாரம் என்பது அண்ணா சொன்னது போல தோளில் போடுகிற துண்டு மாதிரி.. அதைப்போல நான் எண்ணுபவன்.
அதிமுக ஆட்சியை கலைக்க எதிர்த்து ஓட்டு போட்டவர்தான் ஒபிஎஸ். என்றைக்குமே அதிமுக தொண்டன் உங்களை மன்னிக்க மாட்டான். ஓபிஎஸ்-சை நாம் இணைத்துக் கொள்ளலாம். நமக்குள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கழகம் வலிமை பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். அந்த கோரிக்கையை ஏற்று நான் முதல்வராக இருகக்கூடாது என்று ஓட்டுப்போட்ட ஓபிஎஸ்சை சேர்த்துக் கொண்டு ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி கொடுத்தோம்.
துணை முதல்வர் பதவி கொடுத்தோம். இதை விட அவருக்கு என்ன வேண்டும். எப்போது பார்த்தாலும் தர்ம யுத்தம் தர்மயுத்தம் என்கிறார். எத்தனை முறை பண்ணுவீர்கள். மக்களுக்கு எதுவும் தெரியாதா.. ஓபிஸ்சின் நாடகம் பலிக்காது. திமுகவின் பி டீமாக ஓபிஎஸ்சும் வைத்திலிங்கமும் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
திமுகவின் தூணாக இருக்ககூடிய சபரீசனை ஓபிஎஸ் சந்தித்து இருக்கிறார். நான் ஏற்கனவே சொன்னது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. திமுகவின் பீ டீமாக செயல்படுபவர்கள் எப்படி இந்த கட்சிக்கு விசுவாசமாக இருக்க முடியும். துரோகிகள் என்று கூறி வந்த டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் இன்று நண்பர்களாகி விட்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் யாருக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை. அதிமுகவை ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனால் கைப்பற்ற முடியாது. தொண்டர்கள் இருக்கும் வரை யாரும் கைப்பற்ற முடியாது. தமிழகத்தில் கள்ளச்சாராயம், போலிமது, கஞ்சா போன்ற பேதைப்பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. தி.மு.க. ஆட்சி என்றாலே மக்கள் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் கடைகள் திறந்தே உள்ளது.
அதே போல் கஞ்சாவை ஒழிக்க 2.0, 3.0 என ஓ போட்டுக் கொண்டு தான் இருக்கிறார். இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி விலக்க வேண்டும். இந்த ஆட்சி எப்போது போகும் என மக்கள் எண்ணுகிறார்கள். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து 2026 சட்டமன்றத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும்’என்றார்.