திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் புதிதாக ரூபாய் 23 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஈடில்லா ஆட்சி இரண்டாண்டு சாட்சி என்ற தலைப்பில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை வேளாண்மை துறை சமூக நலத்துறை உள்ளிட்ட 12 துறைகளின் சார்பில் 6779 பயனாளிகளுக்கு 15 கோடியே 86 லட்சத்து 12 ஆயிரத்து 887 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வேலு வழங்கி பேசியதாவது
3,200 ஆண்டுகளுக்கு முன் தமிழ் இருந்ததற்கு சான்றாக கீழடி அருங்காட்சியகம் நமக்கு கிடைத்துள்ளது பெருமை மிக்கது என்றும், திருவண்ணாமலையை போன்று பல்வேறு புகழ்மிக்க திருக்கோவில்களின் பட்டியலை வாசித்த அவர் ஆன்மீகத்திற்காக ஆட்சி நடத்தும் ஒரே ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்றும் பெருமிதமாக பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் நிலத்தடி நீரை உயர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆட்சியருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்..