முதல்வர் ஸ்டாலின் வரும் 23-ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் பயணம்..!

சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது..

2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23-ம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன்.

தொழில் துறை நிகழ்ச்சிகள் என்பவை அந்தத் துறை நிகழ்ச்சிகளாக மட்டும் அமைவது இல்லை, இந்த மாநில வளர்ச்சியினுடைய நிகழ்ச்சிகளாகவும் அமைந்திருக்கின்றன. புதிய முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு, அகில இந்திய அளவில் முன்னணி மாநிலங்களுள் ஒன்றாக விளங்குகிறது. அகில இந்திய அளவில் மட்டுமல்ல, தெற்காசிய அளவில், முதலீடுகளை ஈர்த்திட சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிட வேண்டும் என்ற குறிக்கோளை அடைவதற்காக அல்லும் பகலும் உழைத்து வருகிறோம்.

அதிலும் குறிப்பாக ஜப்பானிய முதலீட்டாளர்கள் பெரிதும் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. எண்ணற்ற ஜப்பானிய நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர். ஜப்பான் – இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை திட்டத்தின்கீழ், இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 ஜப்பானிய தொழில்நுட்ப நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழ்நாட்டில், அதிக அளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர்.

இந்த உறவை மேலும் வலுப்படுத்திடும் வகையில்தான், இந்த மாத இறுதியில், முதலீட்டுக் குழுவுக்கு தலைமை தாங்கி, நான் ஜப்பான் செல்ல இருக்கிறேன். அங்கு முன்னணி தொழில் துறைத் தலைவர்களையும், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று, தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள வருமாறு நான் அழைப்பு விடுக்க இருக்கிறேன்.

இந்திய அளவில், இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 2030-ம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்று ஒரு உயரிய இலக்கை நிர்ணயித்திருக்கிறேன். இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முயற்சிகளையும், நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.