கர்நாடகா தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள்… பாஜகவை பின்னுக்கு தள்ளியது காங்கிரஸ்..!

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் போட்டியிடும் 2,615 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தான் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி தான் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் நபர்களை அதிகமாக வேட்பாளர்களை நிறுத்தி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இன்றைய தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள் மே 13ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினமே மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரியவரும். இந்நிலையில் தான் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீதான குற்றவழக்குகள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

அதாவது கர்நாடகா சட்டசபை தேர்தலில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 2,615 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மியை சேர்ந்த 790 வேட்பாளர்கள், மாநில கட்சியை சேர்ந்த 255 வேட்பாளர்கள், அங்கீகாரம் பெறாத கட்சிகளின் 640 வேட்பாளர்கள், 901 சுயேச்சை வேட்பாளர்களில் 581 பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளது.

அதன்படி மொத்த வேட்பாளர்களில் 22 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 404 பேர் தீவிரமான கிரிமினல் வழக்கு உள்ளது. இது மொத்த வேட்பாளர்களில் 16 சதவீதமாகும். மேலும் கிரிமினல் வழக்குகளை பொறுத்தமட்டில் தேசிய கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது தான் அதிகம் உள்ளது. அதாவது தேசிய கட்சிகளின் வேட்பாளர்களான 269 கிரிமினல் வழக்குகளையும், 165 தீவிரமான கிரிமினல் வழக்குகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

மாநில கட்சியை பொறுத்தமட்டில் போட்டியிடும் 256 வேட்பாளர்கள் மீது 110 கிரிமினல் வழக்குகளும், 87 தீவிரமான கிரிமினல் வழக்குகளும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த தேர்தலை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் கிரிமினல் வழக்கு உள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்துள்ளது. கடந்த 2018 தேர்தலில் 391 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்கு இருந்த நிலையில் தற்போது 581 வேட்பாளர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

கட்சி வாரியாக பார்த்தால் காங்கிரஸ் கட்சியில் அதிகமானவர்கள் வழக்குகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதாவது 122 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. காங்கிரஸ் கட்சி 223 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அதன்படி பார்த்தால் மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் இது 55 சதவீதமாகும். மாறாக பாஜகவில் 70 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இது அக்கட்சி மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் 34 சதவீதமாகும். ஜேடிஎஸ் கட்சியில் 48 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அந்த கட்சியின் வேட்பாளர்களில் 23 சதவீதமாகும்.

தீவிரமான கிரிமினல் வழக்குகளை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சியில் 69 வேட்பாளர்கள் மீதும், பாஜகவில் 52 வேட்பாளர்கள் மீதும், ஜேடிஎஸ்ஸில் 30 வேட்பாளர்கள் மீதும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜகவை ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சியில் தான் குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இந்த தகவல்களை ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்தத்துக்கான கூட்டமைப்பு சேகரித்து வழங்கி வருகிறது. இந்த அமைப்பு என்பது இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு, கல்வி தகுதி, அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அவர்களின் வேட்புமனுவை ஆய்வு செய்து மக்களுக்கு தெரிவிக்கும் பணியை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.