சென்னை : ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக இன்றும் ‘ரெய்டு’ நடத்தி வருகின்றனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் 10 அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம். ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலகட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீது புகார் எழுந்தது.
அண்மையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜி ஸ்கொயர் நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுகவின் முக்கிய பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
சென்னையில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, திருச்சி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. அதேபோல் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவிலும் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்குத் தொடர்பான இடங்களில், இரண்டாவது நாளாக நேற்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை, சேத்துப்பட்டு உட்பட 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டை ஆஸ்டின் நகரில் உள்ள அலுவலகத்தில் 10 அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவன இயக்குநர் பாலாவின் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடைபெறுகிறது. இதேபோல அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகனின் மகன் கார்த்திக்கின் அலுவலகத்திலும் சோதனை நீடிக்கிறது.