இளைஞர்கள் சைக்கிள் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்- டிஜிபி சைலேந்திர பாபு அட்வைஸ்.!!

சென்னை: சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில், தனியார் அமைப்பு சார்பாக 200 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

டிஜிபி சைலேந்திர பாபு தலைமை வகித்து, சைக்கிள்களை வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் சைக்கிள் ஓட்டுதல் சிறந்த விளையாட்டாக மாறி வருகிறது. அதிக அளவு எரிபொருள் பயன்படுத்துவதைத் தவிர்க்க,சைக்கிள் மற்றும் நடைபயணம் மேற்கொள்ளலாம். இதன் மூலம் பூமி தொடர்ந்து மனிதர்கள் வாழ உகந்த இடமாகவே இருக்கும்.

பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உலக அளவில் தற்போது ‘பாரிஸ் ப்ரெஸ்ட் பாரிஸ்’ என்ற சைக்கிள் விளையாட்டு மிகவும் பிரபலமாகவும், சவாலாகவும் இருந்துவருகிறது.

அதில், 1,200 கி.மீ. தூரம் வரை சைக்கிள் ஓட்ட வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் இதில் பங்கேற்று வருகின்றனர். இதுபோன்ற சவாலான சைக்கிள் போட்டிகளில் பங்கேற்க இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்..