சென்னை: சென்னை உள்ளிட்ட 4 உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியது, பழுது காரணமாக 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 268 மையங்களில் எண்ணப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் உள்ள 489 பேரூராட்சிகளில் 74.68 சதவீதம், 138 நகராட்சிகளில் 68.22 சதவீதம், 21 மாநகராட்சிகளில் 52.22 சதவீதம் என மொத்தம் 60.70 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 80.49 சதவீதம், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
மேலும் இதர மாவட்டங்களான அரியலூர்-75.69 சதவீதம், செங்கல்பட்டு- 55.30 சதவீதம், கோவை- 59.61 சதவீதம், கடலூர்-71.53 சதவீதம், திண்டுக்கல்- 70.65 சதவீதம்,ஈரோடு- 70.73 சதவீதம், கள்ளக்குறிச்சி-74.36 சதவீதம், காஞ்சிபுரம்-66.82 சதவீதம், கன்னியாகுமரி-65.72 சதவீதம், கரூர்-76.34 சதவீதம், கிருஷ்ணகிரி-68.52 சதவீதம், மதுரை-57.09 சதவீதம், மயிலாடுதுறை-65.77 சதவீதம், நாகப்பட்டினம்-69.
19 சதவீதம், நாமக்கல்-76.86 சதவீதம், பெரம்பலூர்-69.11 சதவீதம், புதுக்கோட்டை-69.61 சதவீதம், ராமநாதபுரம்- 68.03 சதவீதம், ராணிப்பேட்டை-72.24 சதவீதம், சேலம்-70.54 சதவீதம், சிவகங்கை-67.19 சதவீதம், தென்காசி-70.40 சதவீதம், தஞ்சாவூர்-66.12 சதவீதம், தேனி-68.94 சதவீதம், நீலகிரி-62.68 சதவீதம்,தூத்துக்குடி-63.81 சதவீதம், திருச்சி-61.36 சதவீதம், திருநெல்வேலி-59.65 சதவீதம், திருப்பத்தூர்-68.58 சதவீதம், திருப்பூர்-60.66 சதவீதம், திருவள்ளூர்-56.61 சதவீதம், திருவண்ணாமலை-73.46 சதவீதம், திருவாரூர்-68.25 சதவீதம், வேலூர்-66.68 சதவீதம், விழுப்புரம்-72.39 சதவீதம், விருதுநகர்-69.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குச்சாவடிகளில் இருந்து பாதுகாப்புடன் நேற்று முன்தினம் எடுத்து வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு, 268 வாக்கு எண்ணும் மையங்களில் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிரமாககண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் விதமாக பெரிய திரைகளிலும் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸார், வளாகப் பகுதி, வளாகத்துக்கு வெளியே மற்றும் நுழைவு வாயில் பகுதியில் உள்ளூர் போலீஸார் என 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மறுவாக்குப்பதிவு
இதனிடையே தமிழகத்தில் 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை ஓடைக்குப்பம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்தியதாக தகவல் கிடைத்ததை அடுத்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்து, மாநில தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்.
இதேபோன்று புதுவண்ணாரப்பேட்டை செரியன் நகர் பகுதியிலும்வாக்குப்பதிவில் முறைகேடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. மேலும்பிற உள்ளாட்சிகளில் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டன. இந்நிலையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோர் வழங்கிய அறிக்கைகள் அடிப்படையில் 7 வார்டுகளுக்கு மறு வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் 51-வது வார்டு, புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள 1174 -வது எண் வாக்குச்சாவடி, 179-வது வார்டு பெசன்ட்நகர் ஓடைக்குப்பத்தில் உள்ள 5059-வதுஎண் வாக்குச்சாவடி மற்றும் மதுரைமாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 17-வது வார்டில் 17-வதுஎண் மகளிர் வாக்குச்சாவடி, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி, 16-வது வார்டில் உள்ள16-வது எண் கொண்ட ஆண் மற்றும்பெண்களுக்கான இரு வாக்குச்சாவடிகள், திருவண்ணாமலை நகராட்சி, 25-வது வார்டில் உள்ள57-வது எண் கொண்ட ஆண் மற்றும் பெண்களுக்கான இரு வாக்குச்சாவடிகள் ஆகிய 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்த 7 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மாலை 5 முதல் 6 மணி வரை கரோனா தொற்று மற்றும் அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்தமறுவாக்குப்பதிவில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் அழியா மை வைக்கப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் சுமார் 500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.