சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் மக்கள் இந்த காய்ச்சலால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சாதாரண சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதோடு இது இயல்பு வாழ்க்கையை முடக்கும் விதமாக அமைந்து உள்ளது. பொதுவாக கிளைமேட் மாறுவதால் ஏற்படும் சீசன் காய்ச்சல் போல இல்லாமல் இந்த காய்ச்சல் மோசமானதாக உள்ளது. மருந்து எடுத்தாலும் குணமாகவில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு, சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தும்மல், மூக்கு அடைப்பு , தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், மூக்கிலிருந்து தொண்டைக்குள் சளி செல்லுதல் ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும்.
கடுமையான உடல் வலிதான் இதன் முக்கியமான அறிகுறி ஆகும். குழந்தைகளுக்கு இந்த பிரச்சனை ஏற்படுத்துவதாகவும், பலருக்கும் மூச்சு விடுவதில் கூட சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அதாவது சளி கடுமையாக இதயத்தை நெருக்கி உள்ளதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் யாருக்கும் ஆக்சிஜன் லெவல் குறையவில்லை. அதேபோல் யாருக்கும் செயற்கை சுவாசம் அளிக்கும் அளவிற்கு நிலை ஏற்படவில்லை. இந்த தொற்று குணமடைய நேரம் எடுக்கும். அறிகுறிகள் வலுவானவை. நோயாளி குணமடைந்த பிறகும், அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்று இந்திய மருத்துவ கழகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் நாடு முழுவதும் அதிகரித்து வரும் இருமல், சளி மற்றும் குமட்டல் வழக்குகளுக்கு மத்தியில் கண்மூடித்தனமான நுண்ணுயிர் எதிர்ப்பிகளை அதாவது ஆண்டிபயாட்டிக்குகளை பயன்படுத்துவதற்கு எதிராக இந்திய மருத்துவ கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில்தான் தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம் நடைபெற உள்ளது. 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் மக்கள் எளிதாக வீட்டிற்கு அருகிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவ வசதியை பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகளில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இன்ஃப்ளூயன்சா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நோக்கில் இன்று காய்ச்சல் முகாம் நடக்கின்றன. சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் அதிக எண்ணிக்கையில் கேஸ்கள் பதிவாகி வருவதால் அங்கே அதிக எண்ணிக்கையில் முகாம்கள் நடக்கின்றன. இது தொடர்பாக இந்திய மருத்துவ கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், H3N2 வைரஸ் மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிக பலம் கொண்டது. இதனால் மக்கள் அதிகமான எண்ணிக்கையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் பரவலாக இந்த வைரஸ் பரவி உள்ளது. அதனால்தான் தற்போது கேஸ்கள் அதிகரிப்பதாக தெரிவித்து உள்ளன, மருத்துவமனைகளுக்கு 30-40 சதவிகித கேஸ்கள் இப்படித்தான் வருகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.