வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் ஏராளமான வடமாநிலங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்துவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த ஏராளமான நிறுவனங்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் நேற்று இரவு ஒரு மணி அளவில் திருப்பூர் தண்டவாளத்தில் கேரளாவில் இருந்து சென்னை சென்ற ரயிலில் அடிபட்டு தண்டவாளத்தில் சடலமாக இருந்துள்ளார் . இது குறித்த தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இன்று காலை சஞ்சீவ் குமாரை கொலை செய்து தண்டவாளத்தில் போட்டு விட்டு சென்றதாக பரவிய வதந்தியின் காரணமாக ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில்வே காவல் நிலையம் முன்பாக குவிந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தவர்களை தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின. இதன்காரணமாக தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதனிடையே சொந்த ஊர் செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் குவிந்தனர். இதுகுறித்து வடமாநில தொழிலாளர்களிடையே கேட்கும்போது, அடுத்தவாரம் ஹோலி பண்டிகை வருவதால், அதனை கொண்டாட ஒரு மாதம் சொந்த ஊருக்கு செல்வதாக தெரிவிக்கின்றனர். சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக தகவல் பரவுகிறது, ஆனால் தமிழர்கள் நண்பர்கள் போலவே இருப்பதாகவும், பாதுகாப்பாக இருப்பதாகவும் வடமாநிலத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.