மாசி பௌர்ணமி பிரதோஷம்: சதுரகிரியில் அதிகாலை முதலே குவியும் பக்தர்கள்..!

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் அதிகாலை முதல் அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்
பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டு வருவதாக கூறப்படுவதால் இது சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது.

கடந்த காலங்களில் சதுரகிரி கோயிலுக்கு தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் உயிரிழந்த நிலையில் மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று முதல் வரும் 7ம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இன்று பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகாலை முதலே சதுரகிரி அடிவாரப் பகுதியில் குவிந்த பக்தர்கள் காலை 7 மணிக்கு கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு தற்போது பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.

இந்த சதுரகிரி கோயில் வனப்பகுதியில் உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன்
பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது. மேலும் நீரோடைகளில் குளிப்பதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் மலைப்பகுதிகளில் தீ
விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் சதுரகிரி கோவில் மலைக்கு செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் எடுத்துச் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.