தமிழ்நாட்டில் அதிவேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல் : பொதுமக்கள் அச்ச பட வேண்டாம்- சுகாதாரத் துறை அறிவிப்பு..!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பெருபாலான இடங்களில் மக்களுக்கு தொண்டைவலி உடல் சோர்வுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவிவருகிறது.

தமிழ்நாட்டில் வழக்கமாக மழை மற்றும் பனிக்காலங்களில் வைரஸ் காய்ச்சல் பரவுவது இயல்பான ஒன்று. ஆனால் நடப்பாண்டில் கோடைகாலம் தொடங்கியுள்ளது. இருப்பினும் தற்போது இந்த வைரஸ் காய்ச்சல் பரவல் என்பது தொடங்கியுள்ளது.

கடந்த சில வாரங்களாக ஒரு மாறுபட்ட சீதோஷ்ண நிலை காரணமாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது அதீத காய்ச்சல் ஆகவும், சளி, இருமல் மட்டுமின்றி உடல் சோர்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்த கூடியதாகவும் இருந்து வருகிறது.

இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் காரணமாக வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இன்ஃபுளுவென்சா (Influenza) என்ற ஃபுளு காய்ச்சல், RSV (Respiratory Syncytial Virus) என்ற சுவாசப்பாதையை பாதிக்கக்கூடிய வைரஸ், கண்களை தக்க கூடிய (adenovirus) வைரஸ் போன்ற வைரஸ்களின் பல்வேறு பரிமாற்றத்தின் காரணமாக இந்த நோய் பாதிப்புகள் அதிகமாக காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாறுபட்ட சீதோஷ்ண நிலை, கொசு புழுக்களின் வாழ்நாள் அதிகரிப்பு காரணமாக இந்த பாதிப்பு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,

டெங்கு, மலேரியா,சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவக்கூடிய நோய்கள் கட்டுக்குள் இருப்பதாகவும், அதற்க்கு மாறாக ஒருசில வைரஸ் காய்ச்சல்கள் மட்டுமே கண்டறியப்படுவதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்:
காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.