மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் புனேவில் நடைபெற்ற ஆசிய பொருளாதார கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றுப் பேசினார்.
இன்னும் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 2047-ம் ஆண்டுக்குள் நமது பொருளாதாரத்தை 35 முதல் 40 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இருப்பது மட்டுமல்லாமல் இன்னும் பல ஆண்டுகளுக்கு இது தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்தியா ஏற்கெனவே பத்தாவது பெரிய பொருளாதார நாடு என்ற இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். இன்று இந்தியாவிடம் இளைஞர்கள் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது எனவும் இது மிகப்பெரிய பலமாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
வளரும் நாடுகளை விட வளர்ந்த நாடுகளில், ரஷ்யா – உக்ரைன் மோதல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, பணவீக்கம், வட்டி விகிதங்கள் மற்றும் வளர்ச்சியில் ஏற்படும் தாக்கங்கள், வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் இரண்டிலுமே பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.