சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதன் முதலாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதன் முதலாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. அது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறுகையில், சென்னை ராஜீவ்காந்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை ஆகிய முக்கிய மருத்துவமனைகளில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் படி, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 4 கோடி செலவில் கல்லீரல் மாற்று அறுவை அரங்கு தயார் செய்யப்பட்டது. இதற்கான உபகரணங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கல்லீரல் அறுவை சிகிச்சையை துல்லியமாக செய்யக்கூடிய கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு அதிநவீன கருவிகள் இங்கு செயல்பாட்டில் உள்ளன.
அதன்பிறகு, தற்போது முதன் முறையாக ஈரோட்டை சேர்ந்த மணி என்ற 52வயது ஆண் ஒருவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கல்லீரல் துறை உருவாக்கி 50 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்த வெற்றிகரமான ஆண்டில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 17 நாட்கள் ஆகிவிட்டன. அவர் நலமுடன் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார் எனவும், அதற்கு உறுதுணையாக மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாற்றியதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.