ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், இரண்டாம் நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இங்கு ஷெட்கள் அமைத்து நாள்தோறும் வாக்காளர்களை தங்க வைப்பதாகவும், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து பல்வேறு அமைப்புகள் தேர்தல் ஆணையத்துக்கு புகார்களையும் அனுப்பியுள்ளன.
இந்நிலையில், வாக்குப்பதிவுக்கான நாள் நெருங்கும் நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு நாட்களாக, வாக்காளர்களுக்கு, ஆயிரக்கணக்கில் பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்றும் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக தகவல் பரவியது. குறிப்பாக, ஈரோடு வீரப்பன்சத்திரம், வளையக்கார வீதி உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பேண்ட், சட்டை, வேட்டி,சேலை, காமாட்சி விளக்கு போன்றவை வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. இந்த தகவல்களின் அடிப்படையில், அலுவலர்களும் சோதனை மேற்கொண்டதாகவும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்து உள்ளனர்.