அதிமுக பொதுக்குழு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பால் சில எட்டப்பர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மதுரை: 2022ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டார். அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அவரது ஆதரவாளர்கள் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதாக நீக்கப்பட்டதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில், பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் தரப்பு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து இரண்டு நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, ஜூலை 11 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. எனவே இதனை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி – ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.
இதனிடையே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பெறுவதில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மீண்டும் போர் உருவானது. பின்னர் இதுதொடர்பாக ஈபிஎஸ் தாக்கல் செய்த இடையீட்டு மனு மீதான விசாரணையில், ஈபிஎஸ் தரப்புக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று (பிப்.23) அதிமுக பொதுக்குழு வழக்கின் விசாரணை மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், ஜூலை 11, 2022 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் எனவும், அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து இயங்குவார் எனவும், அந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லும் எனவும் தீர்ப்பளித்தது. இவ்வாறு ஈபிஎஸ்சுக்கு சாதகமான தீர்ப்பு வந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இதனிடையே மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மகள் உள்பட 51 பேருக்கு அதிமுக சார்பில் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திவிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்களின் அருளால் நல்ல தீர்ப்பு வந்துள்ளது. நேற்று (பிப்.22) முழுவதும் தீர்ப்பை எண்ணி கலங்கி போயிருந்தேன். ஆனால், இன்று காலை ஆர்.பி.உதயகுமார் எழுப்பியுள்ள ஜெயலலிதாவின் கோயிலுக்குச் சென்று வழிபட்டுவிட்டு வருவதற்குள் நல்ல செய்தி வந்துள்ளது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக ஒரு தீய சக்தி என எம்ஜிஆர் சொன்னார். அதே வழியில் வந்த ஜெயலலிதாவும் பல்வேறு இன்னல்களை கடந்து திமுக என்ற தீய சக்தியை ஒடுக்கினார். அதேபோல் கட்சியில் இருந்த சில எட்டப்பர்கள், திமுகவின் பி – டீமாக செயல்பட்டவர்களின் முகத்திரை தற்போது கிழிக்கப்பட்டுள்ளது. அதிமுக 4ஆக சென்று விட்டது என பலர் கூறி வந்தது தற்போது பொய்யாக மாறியுள்ளது. இவை அனைத்துக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு முடிவுக்கு கொண்டு வந்து விட்டது” என்று கூறினார்.
மேலும், “நமது ஆட்சி ஒரு குடும்பத்துக்கானது அல்ல. முழுக்க முழுக்க மக்களின் நலனுக்காக மட்டுமே. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த நாளில் திருமணம் செய்த அனைவரும் ராசிக்காரர்கள். எந்த கொம்பனாலும் அதிமுகவை அசைக்க முடியாது. மதுரை மண்ணை மிதித்தாலே அதிமுகவுக்கு வெற்றிதான். பல பொய்யான வழக்குகளால் திமுகவினர் அதிமுகவினரை கட்டுப்படுத்த முயல்கின்றனர். திருமங்கலம் பார்முலா உருவான இடத்தில் இருந்து கூறுகிறேன், கே.எஸ்.தென்னரசுதான் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெறுவார் என்பது மட்டும் உறுதியான ஒன்று” என்றார்.