புதுடெல்லி: நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ஒன்றிய புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களில் இன்னும் ஒரு மாதத்தில் சிசிடிவி கேமரா பொருத்தாவிட்டால் நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
காவல் நிலையத்தில் விசாரணை கைதி அடித்து சித்ரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் தலைமையிலான அமர்வு, நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்களிலும், ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த கடந்த 2020ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கில் நீதிமன்றத்திற்கு உதவ மூத்த வக்கீல் சித்தார்த்தா தேவ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சஞ்சய் கரோல் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வக்கீல் சித்தார்த்தா தேவ் ஆஜராகி, ”ஏற்கனவே விடுக்கப்பட்ட 6 வார கெடுவில் 25 மாநிலங்கள் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவில்லை” என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், ”இன்னும் ஒரு மாதத்தில் அனைத்து காவல் நிலையத்திலும் சிசிடிவி கேமரா பொருத்தும் உத்தரவுக்கு இணங்கியதற்கான பிரமாணப் பத்திரத்தை ஒன்றிய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும். மீறினால், ஒன்றிய உள்துறை செயலாளர் மற்றும் அந்தந்த மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் உள்துறை செயலாளர்களுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்” என எச்சரிக்கை விடுத்தனர்.