விழுப்புரம் நான்கு ஜோதி ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆசிரமத்தில் பாலியல் வன்கொடுமை செய்து அடித்து துன்புறுத்திய சம்பவத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆசிரம நிர்வாகி உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரமத்தில் இருந்த 16 பெண்கள் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரம பெண்களிடம் தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கடாக் மற்றும் தேசிய மகளிர் ஆணைய வழக்கறிஞர் மீனா குமாரி நேரில் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காஞ்சன் கட்டாக் ஆசிரமத்தில் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய தேசிய மகளிர் ஆணைய வழக்கறிஞர் மீனா குமாரி விசாரணை அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார்.