கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் நான் ஒரு கோடி பணம் கேட்டது உண்மைதான் என கேபி. முனுசாமி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ. பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, கேபி. முனுசாமி, அதிமுகவில் பதவிகள், MLA சீட் வாங்கி கொடுக்க பேரம் பேசுவதாக குற்றசாட்டை முன்வைத்தார். மேலும் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு சீட் கேட்ட போது என்னிடம் ஒரு கோடி ரூபாய் கேட்டார் என்று கூறி, அவர் பேசிய ஆடியோவை வெளியிட்டார்.
இந்த ஆடியோ விவகாரம் அதிமுகவில் பேசும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த கேபி முனுசாமி, கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டது எனது குரல்தான். ஆனால் தேர்தல் செலவுக்காக பணம் கேட்டதை தவறாக திரித்து கூறுகின்றனர். ஆடியோ வீடியோ எதை வெளியிட்டாலும் பயப்படப் போவதில்லை. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேர்தல் செலவுக்கு கட்சி சார்பில் எல்லோருக்கும் பணம் கொடுத்தார்கள்.
ஆனால் எனக்கு மட்டும் பணம் கொடுக்கவே இல்லை. அதனால் தேர்தல் செலவுக்கு எனக்கு தெரிந்தவர்களிடம் ரூபாய் ஒரு கோடி கேட்டேன். அதுபோலத்தான் கிருஷ்ணமூர்த்தியிடம் கடனாக கேட்டேன். கடன் கேட்ட பணத்தை நான் லஞ்சம் கேட்டதாக கூறுவது கேவலம். ஒபிஸ் தூண்டிவிட்டுதான் கிருஷ்ணமூர்த்தி இப்படியான செயலில் ஈடுபடுகின்றார். லஞ்சம் வாங்கினேன் என்பது முற்றிலும் பொய். என்ன நடந்தது என்று கிருஷ்ணமூர்த்தியின் மனசாட்சிக்கு தெரியும் என கூறினார்.