புதுடெல்லி: உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சிறப்பு வரியை மத்திய அரசு நேற்று குறைத்தது.
இது தவிர்த்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டீசல், விமானங்களுக்கான எரிபொருள் ஆகியவை மீதான சிறப்பு வரியும் குறைக்கப்பட்டது.
ஒரு துறைசார் நிறுவனங்கள் எதிர்பாராதவிதமாக ஒரு குறிப்பிட்ட தருணத்தில் அதிக லாபம் ஈட்டும்போது அந்த லாபத்துக்கு அரசு சிறப்பு வரி விதிக்கும். இந்த திடீர் வரிவிதிப்பு ‘விண்ட்ஃபால் டேக்ஸ்’ (windfall tax) என்று அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போர் ஏற்பட்டதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டது. இதனால், கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டிவந்தன. இந்தச் சூழலில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு இந்திய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு சிறப்பு வரி விதித்தது. இந்நிலையில் தற்போது அந்த வரியைக் குறைத்துள்ளது.
உள்நாட்டு கச்சா எண்ணெய் மீதான சிறப்பு வரி 1 டன்னுக்கு ரூ.5,050 என்பதாக இருந்தது. தற்போது அது ரூ.4,350 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்றுமதி டீசலுக்கான சிறப்பு வரி லிட்டருக்கு ரூ.7.50 ஆக இருந்த நிலையில் ரூ.2.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் மீதான சிறப்பு வரி லிட்டருக்கு ரூ.6 – லிருந்து ரூ.1.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலையில் இந்த சிறப்பு வரியை மத்திய அரசு கொண்டுவந்தது. அப்போது 1 டன் உள்நாட்டு கச்சா எண்ணெய்க்கு ரூ.23,250 வரிவிதிக்கப்பட்டது. தற்போது அந்த வரி ரூ.4,350 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வரி மூலம் நடப்புநிதி ஆண்டில் மத்திய அரசுக்கு ரூ.25,000 கோடி வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.