ஈரோடு கிழக்கில் திமுக, அதிமுக தேர்தல் அலுவலகத்திற்கு சீல் – தேர்தல் ஆணையம் அதிரடி..!

ரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பல கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியிலிருந்து தென்னரசு போட்டியிடுகிறார்.

இதற்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் கட்சியினர் தேர்தல் அலுவலகங்கள் அமைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இடைத்தேர்தலில், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் தபால் வாக்கு பெறும் பணி இன்று தொடங்கியுள்ளது.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த திமுக பணிமனைகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்தனர். அனுமதியின்றி செயல்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் செயல்பட்டு வந்த திமுகவின் 10 பணிமனைளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதேபோல் அதிமுகவின் 4 பணிமனைகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சீல் வைத்தனர். சீல் வைக்க வந்த தேர்தல் அதிகாரிகளுடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.