தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் ( பிப்.19 ) நடைபெற உள்ளது. அதில் சுமார் 2.80 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
எனவே இன்றும் (பிப்.17), நாளையும் (பிப்.18) சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் தலா 500 சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “வார இறுதி நாட்களில் ஏராளமானோர் வெளியூர் செல்வது வழக்கம்.
மேலும் நாளை மறுநாள் சனிக்கிழமை என்பதால் வழக்கமான பயணிகளுடன் வாக்களிக்க செல்வோரும் பயணிப்பர். எனவே இன்றும், நாளையும் சென்னையில் இருந்து 500 விரைவு பேருந்துகள் இயக்க உள்ளோம். அதேபோல் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக இருக்கிறோம். மேலும் மேற்கு மாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப விரைவு பேருந்துகளை இயக்க உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.