திரிபுராவில் விறு விறு வாக்குப்பதிவு… வெல்ல போவது யார்..?

கர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் ஒரே கட்டமாக 60 சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் சட்ட சபை தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 60 தொகுதிகளை கொண்ட திரிபுராவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2018- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 25 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடித்தது முதல்வராக மாணிக் சாகா உள்ளார்.

ஆட்சியை தக்க வைக்க பாஜகவும் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பலப்பரிட்சை நடத்துகின்றன. இதனால், தேர்தல் களம் அனல் பறக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

மொத்தம் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4.3 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 13 இடங்களில் போட்டியிடுகிறது. மீதம் உள்ள 4 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியில் போட்டியிடுகின்றன. மறுமுனையில் ஆளும் பாஜக கூட்டணியில் ஐபிஎப்டி கட்சி இடம் பெற்றுள்ளது. இந்தக் கட்சிக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏனைய 55 தொதிகளிலும் பாஜகவே களம் காண்கிறது.

மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியும் திரிபுராவில் 28 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுகிறது. வேறு சில கட்சிகள் போட்டியில் இருந்தாலும் ஆளும் பாஜக எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. திரிபுரா முதல்வர் மாணிக் சகா, பார்டோவாலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். திரிபுரா சட்டமன்ற களத்தில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 28 லட்சத்து 13 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்காக 3,337-வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,100 வாக்குச்சாவடிகள் பதற்றமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 25 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேர்தலை முன்னிட்டு வங்காள தேசத்துடனான சர்வதேச எல்லைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிற மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்களும் காலையிலேயே வாக்களிக்க ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்தனர். வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் 2 ஆம் தேதிதான் எண்ணப்படுகின்றன. தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.