ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக வரும் 18ம் தேதி பதவியேற்க இருப்பதாக சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்க உள்ள நிலையில் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை அவர் இன்று ராஜிநாமா செய்தார்.
சென்னையில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நாடாளுமன்றத்தில் பல்வேறு பதவிகளை வகித்த சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி விலகல் கடிதத்தை கணத்த இதயத்தோடு ஏற்றுக் கொள்கிறோம். கட்சிக்காக அவர் ஆற்றிய சேவைக்கு எப்போதும் பாஜக நன்றி கடன் பட்டு இருப்பதாகவும் அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், 17 வயதில் தொடங்கிய பொது வாழ்க்கை தற்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைய பாஜக அற்புதமான இளைய தலைமுறைகளின் தலைமையில் இயங்கி வருகிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியை அண்ணாமலை அமைத்துக் காட்டுவார் என்ற நம்பிக்கையில் பாஜகவிலிருந்து விடைபெறுவதாக கூறினார்.
மேலும், ஜார்க்கண்டில் அதிகமாக பழங்குடியின தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வதாகவும், அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்வேன் எனக் கூறிய அவர் வரும் 18ம் தேதி ஜார்க்கண்ட் ஆளுநராக பதவியேற்க உள்ளதாகவும் தெரிவித்தார்.