பிரஸ்ஸல்ஸ்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரும் 2035 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் புதிய கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்து இருக்கிறது.
இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை உயரும் என்று நம்பப்படுகிறது.
உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து இருக்கிறது. இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே வருகிறது.
இதனை தடுக்க கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே அதிகளவில் கார்பனை வெளியேற்றும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இதன் விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற கூட்டத்தில் பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க வரும் 2035 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல்களில் இயங்கும் கார்களுக்கு தடை விதிக்க முடிவு செய்து இருக்கிறது.
வரும் 2035 ஆம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல்களில் இயங்கும் கார்களின் விற்பனைக்கு தடை விதிக்கும் சட்டம், ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 2035 ஆம் ஆண்டிற்குள் 100 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேற்றாத வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என அந்த சட்டம் தெரிவிக்கிறது.
இதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் வரும் 27 நாடுகளில் 2035 ஆம் ஆண்டுக்கு பிறகு எரிபொருள் வாகனங்கள் உற்பத்தியும் விற்பனையும் தடை செய்யப்படுவதுடன், முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி 2030 ஆண்டிலேயே 55 சதவீதம் கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றாத வாகனங்களை விற்பனை செய்ய நிறுவனங்களுக்கு அந்த சட்டம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்தே 37.5 சதவீத கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியேறுவதை நிறுத்த வேண்டும் என்ற உத்தரவும் அமலில் உள்ளது. எரிபொருள் மூலமாக இயங்கும் கார்களை விட எலெக்ட்ரிக் கார்களின் இயக்க செலவு மிகவும் குறைவு என ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற பேச்சுவார்த்தை அதிகாரி ஜான் ஹிடெமா கூறியுள்ளார்.
அதே நேரம் மக்கள் வாங்கக்கூடிய விலையில் மின்சார வாகனங்களை நுகர்வோருக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே ஐரோப்பிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக இது அமலாகவில்லை. மார்ச் மாதம் இதற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஈரான் போன்ற அரபு நாடுகளின் பொருளாதாரம் பெட்ரோல், டீசல் ஏற்றுமதியையே பெருமளவில் நம்பி இருக்கிறது. குறிப்பாக வாகன பயன்பாட்டிற்காக அந்த நாடுகளிடம் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனின் இந்த முடிவு அந்த நாடுகளுக்கு பலத்த அடியாக இருக்கும் என கூறப்படுகிறது.