ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று முதல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். திருமகன் ஈவெராவின் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் சார்பில் மேனகா உள்பட மொத்தம் 77 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளன.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் அதிமுக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவுக்கு ஆதரவாக அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என 3 நாட்கள் பரப்புரை செய்யும் அவர், இரண்டாவது கட்டமாக 24 மற்றும் 25-ம் தேதிகளில் வாக்கு சேகரிக்கிறார்.