கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : 3 மாநிலங்களில் 60 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை..!

கோவை உக்கடம் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கடந்தாண்டு அக்டோபர் 23-ம் தேதி அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது.

காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் காரை ஓட்டிவந்த ஜமேசா முபின் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், சம்பவம் நடந்த இடத்தில் ஏராளமான ஆணிகள், கோலி குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனை செய்த போது 75 கிலோ வெடி மருந்துகள், சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் மற்றும் குறிப்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு காவல் துறையினர் அவற்றை பறிமுதல் செய்தனர். தமிழ்நாடு அரசின் உத்தரவின் பேரில் வழக்கு என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமைக்கு) மாற்றப்பட்டது. இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் தொடர்புடையவர்களாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான், முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ் கான், ஷேக் ஹியததுல்லா, சனோபர் அலி உள்பட 11 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அண்மையில் இவ்வழக்கில் உயிரிழந்த ஜமேசா முபினின் மனைவியிடம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.

இந்நிலையில் கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் 60 இடங்களில் என்.ஐ. ஏ அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 15) காலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, கோவை, திருச்சி, மயிலாடுதுறை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சம்பவம் நடந்த கோவை மாவட்டத்தில் 15 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. உக்கடம், கோட்டைமேடு, வின்செண்ட் சாலை ஹவுசிங் யூனிட், குனியமுத்தூர் பிருந்தாவன் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.