இனி திருடர்கள் ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.. சென்னைக்கு வந்தாச்சு அதி நவீன ‘சூப்பர் வேன்’ கண்காணிப்பு..!

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஏற்படும் குற்றச் சம்பவங்களை தடுக்க அதிநவீன காவல் வாகனத்தை அறிமுகப்படுத்த சென்னை போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை: தலைநகரில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களை காவல்துறையினர் அறிமுகப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிசிடிவி கேமரா முதல் ட்ரோன் வரையிலான புதிய தொழில்நுட்பங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக ஒருங்கிணைந்த நடமாடும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு வாகனத்தை பயன்படுத்துவதற்கான ஆய்வை சென்னை காவல்துறை உயரதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு மற்றும் கூடுதல் ஆணையர் லோகநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் அதிநவீன வாகனத்தை ஆய்வு செய்தனர்.

இந்த வாகனம் மூலம் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் நடமாடும் வாகனத்தை அருகில் வைத்துக் கண்காணிப்பில் ஈடுபடலாம் என்றும் 5 நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட சிசிடிவி கேமராக்கள் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.

இதன் மூலம் தெளிவான மற்றும் துல்லியமான காட்சிகளைப் பெற முடியும் என்றும், இரவு நேரங்களில் கூட தெளிவான காட்சிப் பதிவு மேற்கொள்ளும் வசதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 360 டிகிரி சுழன்று வீடியோ எடுக்கும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, 500 மீட்டர் வரை கூட்டங்களில் உள்ள பொது மக்களைக் கண்காணிக்க முடியும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் பேஸ் ரெஹகனேஷன் எனப்படும் முக அடையாளம் காணப்படும் வசதி கேமராவில் இருப்பதால் கூட்டங்களில் பங்கேற்கும் நபர்களைப் புகைப்படம் எடுத்து, அதில் குற்றவாளிகள் நுழைந்தால் உடனடியாக கண்டுபிடித்து அருகில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என போலீசார் கூறினர்.

மேலும் ஐந்து கிலோ மீட்டர் வரை பறந்து சென்று கண்காணிக்கும் அதிநவீன ட்ரோன்கள் இந்த வாகனத்தில் உள்ளதாகவும், வாகனத்தில் மூன்று காவலர்கள் கணினியை மூலம் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன்கள் ஆகியவற்றை இயக்கி பொதுமக்கள் கூட்டத்தைக் கண்காணிக்க முடியும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக இதன் மூலம் கிடைக்கும் தகவல்களை வைத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கும், பொதுமக்கள் கூடும் கூட்டத்தில் அருகில் இருக்கும் காவலர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, குற்றங்கள் நடைபெறும் இடத்திலும் அசம்பாவிதங்கள் நடைபெறும் இடத்திலும் விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் ஏஎன்பிஆர் கேமராக்கள், மற்றும் குற்றவாளிகளை அடையாளம் காணும் மென்பொருள் வசதிகளையும் கேமராவில் பொருத்திக் கண்காணிப்பு பணிக்கு பயன்படுத்தலாம் என அதிகாரிகள் கூறினர். சுமார் 56 லட்சம் மதிப்புள்ள இந்த அதிநவீன வாகனத்தை வாங்குவதற்காக காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுபோன்று பல்வேறு தொழில்நுட்ப வசதிகளைச் சென்னை காவல்துறையில் புதிதாக அமல்படுத்த உள்ளதாகவும், சென்னை காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஏற்கனவே வேலூர் மாவட்ட காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.