கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலிலுள்ள யானைக்கு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாகக் குளியல்தொட்டி கட்டப்பட்டிருக்கிறது.
இதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று திறந்துவைத்தார். அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு,
து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள 27 திருக்கோயில்களில் 29 யானைகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. அந்த யானைகளுக்குக் குளியல்தொட்டிகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மருத்துவர் பரிந்துரைப்படி உணவு வழங்கப்படுகிறது.
இந்த அரசு மனிதர்கள், யானைகள் நலன் காக்கும் அரசாக இருக்கிறது. இந்து சமய அறநிலையத்துறையில் இருந்த தொய்வான நிலையை அகற்றி, பக்தர்களின் அடிப்படைத் தேவைகளை அரசு நிறைவேற்றிவருகிறது” என்றவரிடம், பழநி தண்டாயுதபாணி திருக்கோயில் கருவறைக்குள் அத்துமீறி நுழைந்ததாக பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வைத்திருக்கும் குற்றச்சாட்டு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த சேகர் பாபு, “ஊடகங்களில் வர வேண்டும் என்பதற்காக விஷமத்தனமான செய்திகளை வெளியிடுவதுதான் அவரின் வாடிக்கையாக இருக்கிறது.
வெளிநாட்டில் இருப்பவர்களும் பாராட்டும் வகையில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடந்தது. அதில் கரும்புள்ளி ஏற்படுத்த வேண்டும் என அர்த்தமற்ற செய்தியை வெளியிட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. `அனைவரும் சமம்’ என்ற நிலையை உருவாக்கியதாலும், திருக்கோயிலை வைத்து வருமானம் பார்ப்பவர்களை முடக்கியதாலும் தேவையற்ற செய்திகள் வெளியிடப்பட்டுவருகின்றன.
மேலும் பழநிக்கு பெருந்திட்ட வரைவு தயார் செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருக்கிறார். யானைகள் புத்துணர்வு முகாம் தேவையற்றது. கோயில்களிலேயே யானைகளுக்கு அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டிருக்கின்றன” என்றார்.