நீதிபதியாக பதவியேற்ற விக்டோரியா கௌரி-யை எதிர்த்து போராடும் வழக்கறிஞர்கள்..!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக வழக்கறிஞர் விக்டோரியா கௌரி நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று காலை 10:30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், விக்டோரியா கௌரியின் பதவி ஏற்பதற்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அவரது தகுதி குறித்த சந்தேகத்திற்கு இடமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், “எங்களால் கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்படுவதன் பொருத்தப்பாட்டை கேள்விக்குள்ளாக்க முடியாது, கொலீஜியத்தின் செயல்முறை மீது சந்தேகம் எழுப்ப முடியாது,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது லக்ஷ்மண சந்திர விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அவருடைய நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அவர் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட இரண்டு மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, தகுதிக்கும் பொருத்தப்பாட்டிற்கும் வித்தியாசம் இருப்பதாகக் கூறியது.

“தகுதியைப் பொறுத்தவரை கேள்வியெழுப்ப முடியும். ஆனால், பொருத்தப்பாட்டில் அந்தக் கேள்விக்கே இடமில்லை,” என்று மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ராஜூ ராமச்சந்திரன், ஆனந்த் குரோவர் ஆகியோரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

“வெறுப்புப் பேச்சுகள்” மற்றும் அது சார்ந்த அவரது ட்வீட்கள் காரணமாக அவர் அரசமைப்பின் உயர் பதவிக்குத் தகுதியற்றவர் என்றும் “அவர் இதன்மூலம் இந்தப் பதவிக்குத் தன்னை பொருத்தமற்றவராக ஆக்கிக்கொண்டார்” என்றும் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

“விக்டோரியா கௌரியின் மனப்போக்கு அரசமைப்பின் தேவைகளோடு ஒத்துப் போகவில்லை. அதன் கொள்கைகளுக்கு எதிராக உள்ளது,” என்றனர்.

“அரசியல் சார்புடையவர்கள் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த வெறுப்புப் பேச்சுகள் அனைத்தும் 2018ஆம் ஆண்டில் நடந்தது. கொலீஜியம் ஒரு முடிவை எடுக்கும்போது, நீதிபதிகளின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்கிறது. அவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று நீங்கள் யூகித்துக்கொள்ளக் கூடாது,” என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்தது.

மேலும், “தகுதி குறித்து நாங்கள் எதுவும் கூறும் நிலையில் இல்லை. கொலீஜியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லும் நிலையிலும் நாங்கள் இல்லை,” என்று நீதிபதிகள் கூறினர்.

“இதில் எங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம். நம்மிடம் மிகவும் வலுவான ஆய்வு செயல்முறை உள்ளது,” என்று மேலும் கூறினர்.

வழக்கறிஞர்கள், அவரது கருத்துகள் இயல்பில் தீவிரமானவை எனக் கூறி, அவரது முன்னாள் முகம் நீதிபதியாக இருக்கத் தகுதியற்றது என்றனர்.

ஆனால், “நாங்கள் மனுவை ஏற்றுக்கொண்டால், மிகவும் தவறான முன்னுதாரணத்தை அமைத்துவிடுவோம்,” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுத்தனர்.

மேலும், அவர் கூடுதல் நீதிபதியாக மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் செயல்திறன் குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு இத்தகைய நியமனங்கள் நிரந்தரம் செய்யப்படாத நிகழ்வுகளும் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். கடந்த 20 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார். தற்போது உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசின் துணை சொலிசிட்டர் ஜெனரலாக இவர் பதவி வகிக்கிறார்.

இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். அந்தக் கட்சியின் தேசிய மகளிர் அணி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தைச் சேர்ந்த 21 வழக்கறிஞர்கள் பிப்ரவரி 2ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட கொலீஜியத்தின் 3 நீதிபதிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர்.

அந்தக் கடிதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கறிஞராகப் பணிபுரியும் லெக்‌ஷ்மண சந்திரா விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் வழங்கிய பரிந்துரைகளை திரும்பப் பெறுமாறு மூத்த வழக்கறிஞர்களான என்.ஜி.ஆர்.பிரசாத், வைகை உள்ளிட்ட 21 பேர் கோரிக்கை வைத்துள்ளனர்.

விக்டோரியா கௌரி, சிறுபான்மை மக்களுக்கு எதிராகப் பேசிய வெறுப்பு பேச்சுகளைச் சுட்டிக்காட்டி அவரது நியமனத்தைத் திரும்பப் பெறுமாறு அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்ப்பு தெரிவித்து 21 வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்

நீதிபதியாக வரும் நபர்கள் எந்தச் சார்பு நிலையும் இல்லாமல் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதிப்புகளையும் மாண்புகளையும் காக்க வேண்டும். விளிம்புநிலை மக்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளை பயன்படுத்தி அவர்களை துன்பத்தில் ஆழ்த்தக்கூடாது.

இது உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளிலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆனால் விக்டோரியா கௌரியின் வெறுப்பு பேச்சுகள் இதை மீறும் வகையில் இருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் யுடியூப் பக்கத்தில், “தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு பாதிப்பாக இருப்பவர் யார்: ஜிஹாத்தா அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளா? – விக்டோரியா கௌரியின் பதில்கள்” என்ற தலைப்புடன் இருக்கும் வீடியோவின் லிங்கையும், “பாரதத்தில் கிறிஸ்துவ மிஷனரிகளின் கலாசார படுகொலை – விக்டோரியா கௌரி” என்ற தலைப்பில் இருக்கும் மற்றொரு வீடியோவின் லிங்கையும் அந்தக் கடிதத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இரண்டு வீடியோக்களிலும் விக்டோரியா கௌரி பேசிய கருத்துகள் சிறுபான்மை சமூகமான கிறிஸ்தவ சமூகத்திற்கு எதிராக உள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.மேலும் இந்த வீடியோக்களில் விக்டோரியா கௌரி பேசியதையும் வழங்கறிஞர்கள் தங்களின் கடிதத்தில் மேற்கோள் காட்டியுள்ளனர்.

இந்தக் கடிதத்தில் உள்ள லிங்கில் இருக்கும் ஒரு வீடியோ தற்போது பொதுமக்களின் பார்வைக்கு தெரியவில்லை. அந்த வீடியோ தற்போது பிரைவேட்டாக வைக்கப்பட்டுள்ளது. மற்றொரு வீடியோவில் அவர் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

சென்னை வழக்கறிஞர்கள் எழுதிய கடிதத்தைப் போலவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை சேர்ந்த 54 வழக்கறிஞர்கள் ஒரு கடிதத்தை கொலீஜியத்திற்கு அனுப்பி இருக்கின்றனர்.

அந்தக் கடிதத்தில் விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், “18 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் ஒருவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இருந்து நீதிபதியாக இருக்கிறார். விக்டோரியா கௌரி சட்டத்தின் வளர்ச்சிக்காக பங்களிப்புகளை வழங்கியுள்ளவர்.

இதற்கு முன்பு வழங்கறிஞர்களாக இருந்து நீதிபதிகளான பலரும் அரசியல் கட்சிகளில் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் விக்டோரியா கௌரி நியமனத்தின்போது மட்டும் அவரின் அரசியல் சார்பு நிலையை விமர்சனம் செய்கின்றனர்.

அவரின் நியமனம் அரசியல் ரீதியாக நடக்கவில்லை. விக்டோரியா குறித்த தகவல்கள் காவல்துறை, உளவுத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு மத்திய, மாநில அரசிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் தான் கொலிஜீயத்தால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வழங்கறிஞர்கள் பலர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் பக்க சார்பின்றி நியாயமாகத் தங்களது சட்டப் பணிகளைச் செய்துள்ளனர்.

அவர்களைப் போல விக்டோரியாவும் செயல்படுவார். அதனால் அவரது நியமனத்தை ரத்து செய்ய எழுந்த கோரிக்கையைப் புறந்தள்ள வேண்டும்,” என்று அந்தக் கடிதத்தில் 54 வழங்கறிஞர்கள் கையெழுத்திட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட கொலீஜியத்தின் 3 நீதிபதிக்களுக்கும் அனுப்பியுள்ளனர்.