பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் என்பது தமிழர்களின் உணர்வோடு கலந்து விட்ட திருக்கோயில். இத்திருக்கோயிலில் உள்ள முருகன் நவபாஷாணத்தால் ஆனவர். இந்த சிலை போகர் என்ற சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனிக்கு, சாதாரண நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் முருகனை வழிபட குடும்பத்துடன் வருகிறார்கள். அண்டை மாநிலமான கேரளத்திலிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள இந்த திருக்கோயிலில், கடந்த ஜனவரி 27-ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்துள்ளது. திருக்கோயில் சீரமைப்பு பணிகள், திட்டமிடப்பட்ட கட்டுமானப் பணிகள் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாகவும், ஆகம விதிகளைப் பற்றி துளியும் கவலைப்படாமல், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், அதிகாரிகளும் என்ன நினைத்தார்களோ, என்ன சொன்னார்களோ அதுவே நடந்துள்ளதாகவும், பழனி மக்களும், பக்தர்களும் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர்.
எந்தவொரு திருக்கோயிலிலும் மகா கும்பாபிஷேகம் நடந்தால், 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடக்க வேண்டும் என்பது ஆகமம். தடையின்றி மண்டலாபிஷேகம் நடக்க வேண்டுமானால், இடையில் பெரும் திருவிழாக்கள் வராமல் இருக்க வேண்டும். அதற்கேற்பவே மகா கும்பாபிஷேக தேதியை நிச்சயத்திருக்க வேண்டும். ஆனால்,மகா கும்பாபிஷேகம் நடந்து, ஒரு வாரத்திற்குள் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் தைப்பூசம் வருகிறது. இது பெரும் திருவிழா என்பதாலும், அதற்கான ஏற்பாடுகளுக்கு குறைந்தது ஒரு வாரமாவது தேவை என்பதாலும், மண்டலாபிஷேகம் என்பது வழக்கமான முறைப்படி நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது. இது தெரிந்தும் அவசர அவசரமாக மகா கும்பாபிஷேகம் ஏன் நடத்தப்பட்டது? யாருடைய உத்தரவின் பேரில் நடத்தப்பட்டது என்பதை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் தெளிவுப்படுத்த வேண்டும்.
மகா கும்பாபிஷேகத்திற்கு முதல்நாள், இந்து சமய அறநிலையளத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, துறை அதிகாரிகளும், ஆளும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் சிலர் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் கருவறைக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளது அதிர்ச்சியும், தாங்க முடியாத மன வேதனையையும் அளிக்கிறது. இது அப்பட்டமான ஆகம மீறல். அது மட்டுமல்ல, இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் செயல். எனவே, இதற்காக, அமைச்சர் முருக பக்தர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இனி இதுபோன்ற ஆகம மீறல்கள் நடக்காது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அமைச்சர், அதிகாரிகள், ஆளும் கட்சி பிரமுகர்களின் ஆகம மீறலால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த தலைமை அர்ச்சகர், பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார். நடந்த தவறுக்காக முருக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டு, தலைமை அர்ச்சகரின் வேண்டுகோளின்படி பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக, “கருவறைக்குள் யாரும் நுழையவில்லை. கருவறைக்கு முன்னதாக இருக்கும் அர்த்த மண்டபத்திற்கு சென்றுதான் சுவாமி தரிசனம் செய்தார்கள்” என்று உண்மையை மறைக்க, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கிறது. இது வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.
இந்து சமய அறநிலையத் துறை சட்டங்களின்படியே, மதச்சார்பற்ற தமிழக அரசோ, அந்த மதச்சார்பற்ற அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளோ, திருக்கோயிலின் வழிபாடு, ஆகமம், கும்பாபிஷேகம் போன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாது. அதனை, சம்பந்தப்பட்ட திருக்கோயில் அறங்காவலர்கள் குழுவும், அர்ச்சகர்களும்தான் முடிவு செய்ய வேண்டும். பழனி முருகன் கோயில் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட கோயில். எனவே, அங்கு பாரம்பரியமாக சித்தர் வழிவந்த குடும்பத்தினருக்கு வழங்கப்படும் மரியாதைகள் வழங்கப்பட வேண்டும்.
அறங்காவலர்கள் குழுவில் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களே இருக்க வேண்டும். அப்போதுதான், ஆகம மீறல்களை தவிர்க்க முடியும். “பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், ஓர் இயற்கை அதிசயம் என்றும், அங்கு ஆகம விதிகளைப் பின்பற்றி, மண்டலாபிஷேகம் நடக்க வேண்டும் என்றும்” சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இனியும் இந்துக்களின் உணர்வுகளை மதித்து, ஆகம விதிகளைப் பின்பற்றி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், அதிகாரிகளும் செயல்பட வேண்டும். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலில் பிராயசித்த கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.